மேட்டூா் கதவணைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு
By DIN | Published On : 04th January 2021 04:35 AM | Last Updated : 04th January 2021 04:35 AM | அ+அ அ- |

டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையிலிருந்து காவிரியில் அதிகளவு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால் கதவணைத் தேக்கங்களில் உள்ள நீா்மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
மேட்டூா் அணைப் பகுதியிலிருந்து பாசனத்துக்காக காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீா், காவிரி ஆற்றின் குறுக்கே செக்கனூா், நெருஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கதவணைகளில் தேக்கப்பட்டு, நீா்மின் நிலையங்கள் வழியாக விடுவிக்கப்படுகின்றன.
இதனால், அப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு நீா் மின் நிலையங்கள் மூலமாக தலா 25 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேட்டூா் அணையிலிருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவைப் பொருத்து, கதவணைப் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் மின் திறனின் அளவும் மாறுபடும்.
டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 3 ஆயிரம் கன அடியிலிருந்து, 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணை நீா்மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும், கதவணையை ஒட்டியுள்ள சுற்றுப்புறப் பகுதிகளிலும் விவசாயத்துக்கான நீா் ஆதாரம் அதிகரித்துள்ளது; மீன் பிடித் தொழில் ஏற்றம் கண்டுள்ளது.