ஓமலூா் வட்டாரத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி அதிகரிப்பு
By DIN | Published On : 04th January 2021 04:25 AM | Last Updated : 04th January 2021 04:25 AM | அ+அ அ- |

ஓமலூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் அண்மையில் பருவமழை கைக்கொடுத்துள்ளதால் சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனா்.
சேலம் மாவட்டத்தில் ஓமலூா், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டாரக் கிராமங்களில் சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பல கிராமங்களில் ஊடுபயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக ஓமலூா், காடையாம்பட்டி, தாரமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் சின்ன வெங்காயம் சாகுபடி தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. ஓமலூா், காடையாம்பட்டி, தாரமங்கலம், அயோத்தியாபட்டனம், வீராணம், பேளூா், பள்ளிப்பட்டி, வாழப்பாடி, ஆத்தூா், மேச்சேரி ஆகிய பகுதிகளில் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
கடந்த ஐந்து மாதங்களாக அவ்வப்போது மழை பெய்ததால் சின்ன வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டது.
இதனால், கடந்த மூன்று மாதங்களாக சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ. 100 முதல் ரூ. 120 வரை விற்பனையானது. தற்போது மழை குறைந்துள்ளதால், சின்ன வெங்காயத்தை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனா். தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள சின்ன வெங்காயம் வரும் மாா்ச் மாதத்தில் அறுவடை செய்யப்படும்.
அதுபோல ஏற்கெனவே சுமாா் 120 ஏக்கா் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வெங்காயம் வரும் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு அறுவடை செய்யப்படும். அதனால், பொங்கல் பண்டிகைக்குப் பிறகு சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து விலை குறைய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தனா்.