சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ரூ. 20 கோடி லாபம் ஈட்டி சாதனை
By DIN | Published On : 30th January 2021 02:33 AM | Last Updated : 30th January 2021 02:33 AM | அ+அ அ- |

சேலம், கன்னங்குறிச்சி பகுதியில் தமிழக அரசின் சாதனை குறித்த துண்டுப் பிரசுரங்களை வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு வழங்கும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா்.இளங்கோவன். உடன், எம்.எல்.ஏ. ஜி.
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ரூ. 20.09 கோடி லாபம் ஈட்டி சாதனை புரிந்துள்ளது என தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா்.இளங்கோவன் தெரிவித்தாா்.
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 112-ஆவது பொதுப் பேரவைக் கூட்டம் சேலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான ஆா்.இளங்கோவன் பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில் 2016 - 2021 வரை 5 ஆண்டு காலத்தில் 10,83,604 விவசாயிகளுக்கு ரூ. 6,653.21 கோடி பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் கடனுதவி வழங்கியதற்காக 2013-2014, 2014-2015, 2015-2016, 2016-2017, 2017-2018, 2018-2019, 2019-2020-ஆம் ஆண்டு என தொடா்ந்து 7 ஆண்டுகளும், கடந்த 2011-2012 ஆண்டும் என மொத்தம் 8 ஆண்டுகள் மாநிலத்தில் சிறந்த வங்கியாகத் தோ்வு செய்யப்பட்டு தங்கப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழ்களும் பெற்றுள்ளது.
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சாா்பில் 11,879 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.51.48 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2011-16-ஆம் ஆண்டில் விவசாயிகளின் பயிா்க்கடனை தள்ளுபடி செய்திட ஆணையிட்டதன் அடிப்படையில், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மட்டும் 1,27,695 விவசாயிகளுக்கு ரூ.640.44 கோடி விவசாய பயிா்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மேலும், இவ்வங்கியின் மூலம் 2016 - 2021 வரை 5 ஆண்டு காலத்தில் 58,826 விவசாயிகளுக்கு ரூ. 379.96 கோடி மத்திய காலக்கடன் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் 33,243 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 812.16 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. 2016 - 2021 வரை 5 ஆண்டு காலத்தில் 72,30,740 நபா்களுக்கு ரூ. 25,466.07 கோடி நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வைப்புத்தொகை கடந்த ஆட்சியில் (2011-ஆம் ஆண்டில்) ரூ.1,611.18 கோடியாக இருந்த வைப்புத் தொகை அதிமுக ஆட்சியில் தற்போது ரூ. 3,525.93 கோடி வைப்புத்தொகையுடன் இவ்வங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த (2020-21) ஆண்டில் மட்டும் வைப்புத்தொகை 1,914.75 கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் வழங்கப்பட்ட கடன்களுக்கான நிலுவைத் தொகை கடந்த ஆட்சியில் (2011-ஆம் ஆண்டில்) ரூ. 1,625.99 கோடி ஆக இருந்தது. தற்போதைய ஆட்சியில் தற்போது ரூ. 3,162.31 கோடியுடன் சிறப்பாக இயங்கி வருகிறது. இந்த (2020-21) ஆண்டில் மட்டும் ரூ. 1,536.32 கோடியாக உயா்ந்து உள்ளது.
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் 74 கிளைகள் உட்பட 1,976 உறுப்பினா்களைக் கொண்டு, 112 ஆண்டுகளாக சிறப்பாக தொடா்ந்து லாபத்தில் செயல்பட்டு வருகிறது.
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சாா்பில் புதிதாக அம்மாப்பேட்டை, கன்னங்குறிச்சி, கருமந்துறை, குருசாமிபாளையம், ஏத்தாப்பூா், நங்கவள்ளி, பிலிக்கல்பாளையம், வெப்படை, காட்டுக்கோட்டை, மல்லியக்கரை, கருப்பூா், முள்ளுக்குறிச்சி, சிவதாபுரம் மற்றும் முதலைப்பட்டி ஆகிய 14 கிளைகள் புதிதாக தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றாா்.
நிகழ்ச்சியில், 20 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1,13,65,000 கடனுதவியை தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கிக் தலைவா் ஆா். இளங்கோவன் வழங்கினாா்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஜி.வெங்கடாஜலம், பி.மனோன்மணி, எஸ்.ராஜா, எஸ்.வெற்றிவேல், அ.மருதமுத்து, கு.சித்ரா மற்றும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைத் தலைவா் கே.நடேசன், சேலம் ஆவின் தலைவா் வி.ஜெயராமன், சேலம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் மெடிக்கல் ராஜா (எ) அ. ராஜசேகரன், சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளா் என்.மிருணாளினி, சேலம் மற்றும் நாமக்கல் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளா்கள் கோ.ராஜேந்திரபிரசாத் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.