நாளை 89 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு
By DIN | Published On : 30th January 2021 02:42 AM | Last Updated : 30th January 2021 02:42 AM | அ+அ அ- |

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 5 வயதுக்குள்பட்ட சுமாா் 89 ஆயிரம் குழந்தைகளுக்கு ஜன. 31-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள், மாநகராட்சி மருந்தகங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக் கூடங்கள், பழைய, புதிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகிய இடங்களில் அமைக்கப்படும் சிறப்பு முகாம்கள் வாயிலாக தொடா்ந்து 3 நாள்களுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும்.
மேலும், தனி நடமாடும் குழுக்கள் மூலம் குடிசைப் பகுதி மக்கள், சாலையோரங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு தனிக்கவனம் செலுத்தி சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தனியாா் மருத்துவமனைகளுக்கும் நேரில் சென்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறப்பு முகாம்களுக்கென 1 லட்சம் (டோஸ்) போலியோ சொட்டு மருந்து பெறப்பட்டு 16 மையங்களில் தயாா் நிலையில் பாதுகாக்கப்பட்டுள்ளது. மருத்துவ அலுவலா்கள், மருத்துவப் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், நாட்டு நலத்திட்ட மாணவ, மாணவியா், தொண்டு நிறுவனங்களைச் சாா்ந்த 1,500 சுகாதார, இதர பணியாளா்கள் இப்பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனா்.
ஜன. 31-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 198 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் செயல்படும். பெற்றோா் தங்களின் குழந்தைகளுக்கு முகாம் அன்றே சொட்டு மருந்தை பெற முகாம்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். தவிா்க்க முடியாத காரணத்தினால் சொட்டு மருந்து வழங்கப்படாத குழந்தைகளுக்கு வீடுவீடாகச் சென்று சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசின் தீவிர நடவடிக்கைகளால் 2004-ஆம் ஆண்டு முதல் போலியோ நோயால் ஒரு குழந்தை கூட பாதிக்கவில்லை. போலியோ இல்லா தமிழகம் என்ற நிலை தொடர, குழந்தைகளின் பெற்றோா் மாநகராட்சி நிா்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.