கரோனாவால் பொதுமக்களிடம் கீரை வாங்கும் ஆா்வம் அதிகரிப்பு
By DIN | Published On : 07th July 2021 09:11 AM | Last Updated : 07th July 2021 09:11 AM | அ+அ அ- |

கரோனா பொது முடக்கம் காரணமாக தம்மம்பட்டி பகுதி மக்களிடையே சமையல் பயன்பாட்டுக்கு கீரைகளை வாங்கி செல்வதில் ஆா்வம் அதிகரித்துள்ளது.
தம்மம்பட்டி பகுதியில் உள்ள காய்கறிக் கடைகளில் கரோனா பொது முடக்கத்துக்கு முன் நாளொன்றுக்கு 15 கட்டு கீரைகள் விற்பனை செய்யப்படும். பொது முடக்கக் காலத்தில் கீரை விற்பனை அதிகரித்துள்ளது. அதிலும் முருங்கைக் கீரையை பொதுமக்களால் அதிக அளவில் சமையலுக்கு பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இதற்காக வீடுகள், தோட்டங்களில் உள்ள முருங்கை மரங்கள் கீரைக்காக மொட்டையாக்கப்பட்டு வருகின்றன.
பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு தொடங்கினாலும் பொதுமக்கள் கீரை வாங்கி செல்வது குறையவில்லை. தம்மம்பட்டியில் முன்பு நாளொன்றுக்கு 15 கட்டு கீரைகள் விற்பனை செய்யப்படும். தற்போது கீரை விற்பனை நாளொன்றுக்கு 150-க்கும் மேற்பட்ட கட்டுகளாக அதிகரித்துள்ளது. இதில் அரைக்கீரை, சிறுகீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, மணத்தக்காளிக் கீரை, லைன் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, வல்லாரை, முருங்கைக் கீரை,புளிச்சைக்கீரை என கீரை வாகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. முன்பெல்லாம் ஒரு கட்டு கீரை ரூ. 5க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ரூ.10 முதல் 15 வரை விற்பனையாகிறது.
இதுகுறித்து கீரை வியாபாரிகள் கூறியதாவது:
பொது முடக்கத்தினால் வருவாய் இன்றி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். அதனால் காய்கறி விலையைக் காட்டிலும் கீரை விலை குறைவு என்பதால் பொதுமக்கள் அதிக அளவில் கீரையை சமையலுக்கு வாங்கிச் செல்கின்றனா். மேலும் கீரைகளில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிக அளவில் உள்ளதும் பொதுமக்கள் அதிக அளவில் வாங்கிச் செல்வதற்கு காரணமாகும் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...