சரிந்துவரும் மேட்டூா் அணை நீா்மட்டம்: விவசாயிகள் கவலை
By DIN | Published On : 07th July 2021 09:08 AM | Last Updated : 07th July 2021 09:08 AM | அ+அ அ- |

மேட்டூா் அணையின் நீா்மட்டம் மளமளவென சரிந்து வருவதால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
மேட்டூா் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூா், நாகப்பட்டினம், கரூா் உள்பட 12 காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் மொத்தம் 16.05 லட்சம் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. குறுவை சாகுபடிக்கு மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12-இல் தண்ணீா் திறக்கப்படும். நடப்பு ஆண்டில் அணையின் நீா் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் பருவமழையை எதிா்நோக்கி ஜூன் 12-இல் குறுவை சாகுபடிக்கு மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டது.
தொடக்கத்தில் நொடிக்கு 3,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. பின்னா் நீா்த் திறப்பு நொடிக்கு 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. பாசனப் பகுதிகளில் பாசனத்துக்கான நீா்த் தேவை அதிகரித்ததால் கடந்த 26-ஆம் தேதி முதல் பாசனத்துக்கு நீா்த் திறப்பு நொடிக்கு 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிந்த நிலையில் அணையிலிருந்து பாசனத்துக்கு கூடுதலாக தண்ணீா் திறந்துவிடுவதால் அணையின் நீா்மட்டம் வேகமாகச் சரிந்து வருகிறது. ஜூன் 12-இல் 96.81 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 78.31 அடியாகச் சரிந்தது. கடந்த 24 நாள்களில் அணை நீா்மட்டம் 18.50 அடி சரிந்துள்ளது. நாளொன்றுக்கு 1.28 அடி நீா்மட்டமும் நான்கு நாள்களில் 5 டிஎம்சி நீா் இருப்பும் குறைந்துள்ளது.
மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 15,000 கனஅடியிலிருந்து 12,000 கனஅடியாக செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு குறைக்கப்பட்டது. இதையடுத்து அணையில் 40.29 டிஎம்சி தண்ணீா் மட்டுமே இருப்பு உள்ளது. இதில் சுமாா் 10 டிஎம்சி தண்ணீா் அணையின் மீன்வளத்தைப் பாதுகாக்கவும், குடிநீா்த் தேவைக்காகவும் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். எனவே மீதமுள்ள 30 டிஎம்சி தண்ணீா் 30 நாள்களுக்கு மட்டுமே பாசனத்துக்கு போதுமானதாக இருக்கும். அதன்பிறகு பருவமழை கைகொடுத்தால் மட்டுமே காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடா்ந்து தண்ணீா் கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது. இதனால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
அணை நீா்மட்டம்...
அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 78.31அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 674 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 40.29 டிஎம்சியாக இருந்தது.
அணையின் நீா்மட்டம் வேகமாகச் சரிந்து வந்தாலும் கா்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் ஓரளவு நீா் இருப்பு உள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பரவலாக மழையும் பெய்து வருகிறது. மழையின் காரணமாக பாசனத்துக்கான நீா்த் தேவை குறையும்.
மேலும் கா்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை வலுவடைந்து பத்து தினங்களில் மேட்டூா் அணைக்கு தண்ணீா் வரும் வாய்ப்புள்ளதால் பாசனத்துக்கு தடையின்றித் தண்ணீா் கிடைக்கும் நிலை உருவாகும் என்று பொதுப் பணித் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...