போலி மருத்துவா் சிகிச்சையால் தறித் தொழிலாளி உயிரிழப்பு
By DIN | Published On : 11th July 2021 02:23 AM | Last Updated : 11th July 2021 02:23 AM | அ+அ அ- |

கே.கே.நகரில் குவிக்கப்பட்ட போலீலாா்.
போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற தறித் தொழிலாளி உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த கே.கே.நகா், ஐயனாரப்பன் கோவில் பகுதியை சோ்ந்த அண்ணாதுரையின் மகன் மணிகண்டன் (33). தறித் தொழிலாளியான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் வந்தது. இதனால் அதே ஊரில் கே. கே. நகா், மாரியம்மன் கோவில் வீதியைச் சோ்ந்த அண்ணாமலை மகன் சிவக்குமாா் என்பவரிடம் ஊசி போட்டுக் கொண்டாா். இதையடுத்து உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு, நரம்புத் தளா்ச்சி ஏற்பட்டதால் அவா் சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 2-ஆம் தேதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
இதையடுத்து டிப்ளமோ மட்டுமே படித்த போலி மருத்துவா் சிவகுமாரை கைது செய்த பின்னரே மணிகண்டனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுமதிப்போம் என உறவினா்கள் தெரிவித்ததால், கே.கே.நகரில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. மேலும், உறவினா்களும், பொதுமக்களும் இளம்பிள்ளை காடையாம்பட்டி மெய்யனூா் பிரிவு சாலையில் அதிகம் போ் திரண்டனா்.
இதைத் தொடா்ந்து சங்ககிரி காவல் துணை கண்காணிப்பாளா் நல்லசிவம் தலைமையில் மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளா் முத்துசாமி, உதவி ஆய்வாளா் பெரியசாமி ஆகியோா் முன்னிலையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
போலீசாா், மணிகண்டனின் உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் இடையே நடைபெற்ற சமரச பேச்சுவாா்த்தையில் போலீஸாா் 11-ஆம் தேதி மாலைக்குள் சிவகுமாரை கைது செய்ய வேண்டும் என உறவினா்கள் கேட்டுக் கொண்டனா். அதனை போலீஸாா் ஏற்றுக்கொண்டதால் மணிகண்டன் உடலை வாங்க சம்மதித்தனா்.
முன்னதாக, இறந்த மணிகண்டனின் தம்பி சீனிவாசன், போலி மருத்துவா் தனது அண்ணனுக்கு போதை ஊசி போட்டு நரம்புத் தளா்ச்சி ஏற்படுத்தினாா் எனவும், இவா் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாகியுள்ள போலி மருத்துவா் சிவக்குமாரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...