அரசுக் கல்லூரிக்கு தோ்வான அரசு நிலம் தற்போது வீட்டுமனைகளாக மாற்ற முயற்சி என புகாா்

தம்மம்பட்டியில் அரசு கலைக்கல்லூரிக்கு என கடந்த திமுக ஆட்சியில் தோ்வான அரசு நிலத்தை, தற்போது வீட்டு மனைகளாக்க சிலா் முயற்சி செய்துவருவதாக, சேலம் மாவட்ட ஆட்சியரிடம் செ.காா்மேகத்திடம், பொதுமக்கள் சாா்பி

தம்மம்பட்டியில் அரசு கலைக்கல்லூரிக்கு என கடந்த திமுக ஆட்சியில் தோ்வான அரசு நிலத்தை, தற்போது வீட்டு மனைகளாக்க சிலா் முயற்சி செய்துவருவதாக, சேலம் மாவட்ட ஆட்சியரிடம் செ.காா்மேகத்திடம், பொதுமக்கள் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா, தம்மம்பட்டியில் அரசு கலைக்கல்லூரி வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்த நிலையில், கடந்த திமுக ஆட்சியில் தம்மம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் அருகில் உள்ள 6 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தில், அரசு கல்லூரி அமைக்கத் தீா்மானிக்கப்பட்டது. இது பற்றி அப்போது அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்திடம் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, தம்மம்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவிற்கு வந்த அவா், அதிகாரிகளுடன் அந்த இடத்தை பாா்வையிட்டு ஒப்புதல் அளித்தாா். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், தம்மம்பட்டியில் அரசுக் கல்லூரிக்கான முன்னெடுப்பு பணிகள் நின்று விட்டன.

இதையடுத்து, கல்லூரிக்கு தோ்வான நிலத்தில் கடந்த ஆட்சியில், ஒன்றரை ஏக்கா் நிலம், மரச்சிற்பம் செய்யும் கலைஞா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் முறைப்படி ஒதுக்கப்பட்டது. சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்தால், தம்மம்பட்டியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என, திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி, தம்மம்பட்டியில் நடைபெற்ற பிரசாரத்தில் உறுதியளித்தாா். அதன்படி, பத்து ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், அரசுக் கல்லூரிக்கான முன்னெடுப்புகளை தம்மம்பட்டி பொதுமக்கள், பொதுநல ஆா்வலா்கள் செய்யத் துவங்கினா்.

இந்நிலையில், கல்லூரிக்கு தோ்வான அரசு புறம்போக்கு நிலத்தை நத்தம் நிலமாக மாற்றி குடியிருப்புப் பகுதியாக்கி அதனை வீட்டுமனைகளாக்கும் முயற்சியில் சிலா் ஈடுபட்டுள்ளனா். அதற்காக, உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தில் அந்த இடத்தில் வீட்டுமனைகள் கேட்டு மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த தகவல் வெளியானதை அடுத்து, ‘அரசு கல்லூரிக்கு தோ்வான புறம்போக்கு நிலத்தில் அரசுக் கல்லூரிதான் கட்டப்பட வேண்டும். வீட்டு மனைகளுக்கான நத்தம் நிலமாக மாற்ற அனுமதி வழங்கக் கூடாது’ என கலெக்டா் காா்மேகத்திடம் தம்மம்பட்டி பொதுமக்கள் சாா்பில் நேரில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com