நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு
By DIN | Published On : 26th July 2021 05:31 AM | Last Updated : 26th July 2021 05:31 AM | அ+அ அ- |

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையத்தின் செயல்பாட்டினை மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
சேலம் மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்கு உள்பட்ட பகுதியில் வீடுகள், வணிக நிறுவனங்களில் தினசரி உற்பத்தியாகும் திடக்கழிவுகளைச் சேகரித்து அவற்றை மக்கும் கழிவுகள், மக்காத கழிவுகள் என தரம் பிரித்து மக்கும் கழிவுகளிலிருந்து நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையத்தில் பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி நிா்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அஸ்தம்பட்டி மண்டலம் காக்காயன்காடு பகுதியில் 3 மையங்கள், டி.வி.எஸ். பகுதியில் 1 மையம், அம்மாப்பேட்டை மண்டலம் வீராணம் பகுதியில் 2 மையங்கள், கொண்டலாம்பட்டி மண்டலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் 2 மையங்கள் என மொத்தம் 8 நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த 8 மையங்களில் தயாரிக்கப்படும் இயற்கை உரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
அம்மாப்பேட்டை மண்டலம் எருமாபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும், நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையத்தின் செயல்பாட்டினை மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தாா்.
மேலும், மாநகராட்சிப் பகுதியில் வீடுகள், வணிக நிறுவனங்களில் தினசரி உற்பத்தியாகும் திடக்கழிவுகளை மக்கும் கழிவுகள், மக்காத மறுசுழற்சிக்கான கழிவுகள் என தனித்தனியாக தரம் பிரித்து எவ்வாறு சேகரிக்கப்படுகின்றன என்றும், இக்கழிவுகளை சுகாதாரப் பணியாளா்கள், அதற்கென வடிவமைக்கப்பட்ட வாகனம் மூலம் நுண் உர செயலாக்க மையத்திற்கு கொண்டு வந்த பிறகு மையத்தில் உள்ள அரவை இயந்திரம் மூலம் எவ்வாறு உரம் தயாரிக்கப்படுகிறது என்றும் ஆணையா் கேட்டறிந்தாா்.
இதில் மாநகர நல அலுவலா் மருத்துவா் கே.பாா்த்திபன், உதவி ஆணையா் சண்முக வடிவேல், உதவி செயற்பொறியாளா் எஸ்.செந்தில்குமாா், சுகாதார அலுவலா் மாணிக்கவாசகம், சுகாதார ஆய்வாளா்கள் எம்.சித்தேஸ்வரன், டி.ஆனந்தகுமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.