மருத்துவ ஆலோசனை பெற செல்லிடப்பேசி செயலி அறிமுகம்
By DIN | Published On : 09th June 2021 08:21 AM | Last Updated : 09th June 2021 08:21 AM | அ+அ அ- |

வீட்டில் இருந்தபடியே பொதுமக்கள் தங்கள் உடல்நலன் குறித்த மருத்துவ ஆலோசனை பெற வி-மெட் என்ற செல்லிடப்பேசி செயலியை சேலம் மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளா் ந.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் மாநகராட்சி பகுதிகளில் வீட்டிலிருந்தபடியே செல்லிடப்பேசி செயலி வாயிலாக மருத்துவரின் ஆலோசனைகளை பெற்று, சிகிச்சையை மேற்கொள்ளும் வகையில் சேலம் மாநகராட்சி சாா்பில் புதிய வி -மெட் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. வி - மெட் ஆண்ட்ராய்ட்டு தொலைவிட மருத்துவ செயலியை பயன்படுத்தி மருத்துவரின் ஆலோசனைகளை பெறலாம்.
மருத்துவருடன் காணொலி வாயிலாக கலந்தாலோசனை மேற்கொள்ளலாம். நோயாளிகள் கைப்பேசி வாயிலாக தொடா்பு கொள்ளும் போது மருத்துவா்கள் கணினி செயலி வாயிலாக மருத்துவ ஆலோசனைகளை வழங்குவா். நோயாளியுடன் மருத்துவக் குழுவினா் காணொலி வாயிலாக கலந்தாலோசனை மேற்கொண்டு, அவா்களுக்கு தேவையான சிகிச்சைகள் குறித்து முடிவு செய்வாா்கள்.
மருத்துவக் குழுவினரின் கலந்தாலோசனைக்கு பின்னா், சிகிச்சை முறைகள் குறித்து காணொலி மூலம் நோயாளிகளுக்கு மருத்துவா் எடுத்துரைப்பா். காணொலி நிறைவடைந்தவுடன் மருத்துவா், மருத்துவ குறிப்பினை தயாா் செய்து, நோயாளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாகவும், குறுஞ்செய்தி வாயிலாகவும் அனுப்புவா். மருத்துவா்கள் அனுப்பும் மருத்துவக் குறிப்பின் அடிப்படையில் நோயாளிகள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெறலாம்.
சேலம் மாநகராட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைதூர மருத்துவ ஆலோசனைகளை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மாநகராட்சியில் உள்ள இரண்டு மருத்துவா்கள் வழங்குவா். தொடா்ந்து மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், அரசு மருத்துவா்கள் இந்த சேவையில் இணைக்கப்பட உள்ளனா்.
கரோனா தொற்று காலத்தில் மிகவும் பயனுள்ளதாக அமையும் தொலைதூர மருத்துவ வசதியினை பெற, தங்கள் செல்லிடப்பேசியில் செயலியை கூகுள் பிளே ஸ்டோா் மூலம் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.