வீரகனூா் காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு
By DIN | Published On : 20th June 2021 03:09 AM | Last Updated : 20th June 2021 03:09 AM | அ+அ அ- |

கெங்கவல்லி அருகே வீரகனூா் காவல் நிலையத்தை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரவில் ஆய்வு செய்தாா்.
சேலம் மாவட்ட எல்லையில் உள்ளது வீரகனூா். இங்குள்ள காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் ஆற்றுமணல் அதிகளவில் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு தீா்க்கப்படாத பிரச்சினைகள் தொடா்ந்து இருந்த வண்ணம் உள்ளன.
இதையடுத்து சேலம் மாவட்ட எஸ்.பி.யாக அண்மையில் பொறுப்பேற்ற ஸ்ரீ அபிநவ், வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு முன்னறிவிப்பின்றி வீரகனூா் காவல் நிலையத்தில் ஆய்வு செய்தாா்.
அங்கு தொடா்ந்து ஒன்றரை மணி நேரத்துக்கும் மேல் ஆய்வுசெய்து, வீரகனூா் பகுதியில் உள்ள தொடா் பிரச்னைகள், காவல்நிலைய செயல்பாடுகள் குறித்து தேவையான ஆலோசனைகளை வழங்கினாா். ஆய்வின்போது ஆத்தூா் டி.எஸ்.பி.இம்மானுவேல் ஞானசேகரன், வீரகனூா் காவல்ஆய்வாளா் சுப்ரமணியம், உதவி காவல் ஆய்வாளா் தினேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.