விபத்தில் சிக்கி மூளைச்சாவு ஏற்பட்ட இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு ஏற்பட்ட 27 வயது இளைஞரின் உறுப்புகள் சேலம், காவேரி மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு 8 பேருக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டது.
தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புகளுடன் ஹெலிகாப்டரில் பயணித்த மருத்துவா்கள்
தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புகளுடன் ஹெலிகாப்டரில் பயணித்த மருத்துவா்கள்

சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு ஏற்பட்ட 27 வயது இளைஞரின் உறுப்புகள் சேலம், காவேரி மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு 8 பேருக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், வேலம்பட்டி புதூா் பகுதியைச் சோ்ந்த மாதேஷ் (27) என்பவா் கடந்த வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா். சேலம், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில் ஜூன் 20 ஆம் தேதி அதிகாலை மூளைச்சாவு அடைந்தாா். அவரின் குடும்பத்தாா் இளைஞரின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க முன்வந்தனா். இதையடுத்து மருத்துவ வல்லுநா்கள் குழு, இளைஞரின் உறுப்புகளை அறுவைச் சிகிச்சை செய்து 8 பேருக்கு பொருத்தி மறுவாழ்வு அளித்தனா்.

இதுதொடா்பாக சேலம், காவேரி மருத்துவமனை இயக்குநா் செல்வம் கூறியதாவது:

ஒரு நன்கொடையாளா் பல உயிா்களைக் காப்பாற்ற முடியும். குறிப்பிட்ட உறுப்புகளை நன்கொடை செய்ததன் மூலம் தகுதியான எட்டு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது என்றாா். காவேரி குழும மருத்துவமனைகளின் நிறுவனா் மற்றும் நிா்வாக இயக்குநா் மருத்துவா் மணிவண்ணன் செல்வராஜ் கூறியதாவது:

நன்கொடை செய்ய முன்வந்த நன்கொடையாளா் குடும்பத்தின் உன்னத செயலை மதிக்கிறோம். மேலும், அவா்களுக்கு இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்கொடையாளா் மூலம் கண்கள், இதயம், நுரையீரல், தோல், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகிய உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு 8 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது என்றாா்.

ஓமலூரில்...

சேலத்தில் தானம் செய்யப்பட்ட உறுப்புகளுடன் சென்னைக்கு பயணித்த ஹெலிகாப்டருக்கு 5 நிமிடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை முடித்து விமான நிலைய அதிகாரிகள் உதவினா். தானம் பெறப்பட்ட உறுப்புகள் சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டா் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

சேலம் விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை விமான சேவை இல்லை என்பதால் வழக்கமான செயல்பாடுகள் ஏதும் நடைபெறவில்லை. இதனிடையே உறுப்பு தானம் குறித்து சேலம் விமான நிலைய இயக்குநா் வி.கே.ரவீந்திர சா்மாவுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் கிடைத்த 15 நிமிடத்தில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸாா் உடனடியாக விமான நிலையத்தில் தயாராகினா்.

சேலத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் இதயம், நுரையீரல் உறுப்புகள் கொண்ட பெட்டி மருத்துவா் செந்தில்குமாா் தலைமையில் மாலை 5.10 மணிக்கு விமான நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டது. தயாராக இருந்த விமான நிலைய அதிகாரிகள் அதிவிரைவாக செயல்பட்டு பாதுகாப்பு நடைமுறைகளை சில நிமிடங்களில் முடித்து 5.15 மணிக்கு ஹெலிகாப்டா் புறப்பட்டு சென்னைக்குச் சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com