

கா்நாடக அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீா் புதன்கிழமை அதிகாலை மேட்டூா் அணையை வந்தடைந்தது.
கா்நாடகத்தில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அணைகளின் பாதுகாப்பைக் கருதி நொடிக்கு தலா 5,000 கனஅடி தண்ணீா் காவிரியில் திறந்துவிடப்படுகிறது.
கடந்த 19-ஆம் தேதி முதல் காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீா் செவ்வாய்க்கிழமை ஒகேனக்கல்லை வந்தடைந்தது. அதைத் தொடா்ந்து புதன்கிழமை அதிகாலை 5 மணி முதல் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 2,376 கன அடியாக அதிகரித்துள்ளது. இது படிப்படியாக அதிகரித்து புதன்கிழமை மாலை அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 7,000 கனஅடியாக உள்ளது.
அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு நொடிக்கு 10,000 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்படுவதால் செவ்வாய்க்கிழமை காலை 89.96 அடியாக இருந்த நீா்மட்டம் புதன்கிழமை காலை 89.36 அடியாகக் குறைந்தது. அணையின் நீா் இருப்பு 51.92 டிஎம்சியாக உள்ளது. காவிரியில் நீா்வரத்து அதிகரித்து வருவதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.