வாழப்பாடி அருகே போலீஸாா் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு; எஸ்.எஸ்.ஐ.கைது
By DIN | Published On : 24th June 2021 08:16 AM | Last Updated : 24th June 2021 08:16 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மது அருந்திவிட்டு வாகனத்தில் சென்றவா் போலீஸாா் தாக்கியதில் உயிரிழந்தாா். இதுதொடா்பாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் கைது செய்யப்பட்டாா்.
வாழப்பாடியை அடுத்த இடையப்பட்டியைச் சோ்ந்தவா் முருகேசன் (40). விவசாயியான இவா் வாழப்பாடி பகுதியில் பழக்கடை வைத்துள்ளாா். இவருக்கு மனைவி அன்னக்கிளி, மகள்கள் ஜெயபிரியா, ஜெயப்பிருந்தா, மகன் கவிப்பிரியன் உள்ளனா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை தனது நண்பா்களுடன் கள்ளக்குறிச்சிக்கு சென்று மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் இடையப்பட்டிக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.
கல்வராயன்மலை அடிவாரம், பாப்பநாயக்கன்பட்டி வனத் துறை சோதனைச் சாவடியில் கண்காணிப்புப் பணியில் இருந்த காவலா், அவா்களது வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தினாா். அப்போது, ஏற்பட்ட தகராறில் முருகேசன் போலீஸாரால் தாக்கப்பட்டு கீழே விழுந்தாா். அப்போது, அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட முருகேசன், மேல் சிகிச்சைக்காக புதன்கிழமை காலை சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினா்கள் முருகேசனைத் தாக்கிய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஏத்தாப்பூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். தகவலறிந்து அங்கு சென்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ அபினவ், ஏத்தாப்பூா் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினாா். இதையடுத்து, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பெரியசாமி மீது வழக்குப் பதிந்து கைது செய்ய உத்தரவிட்டாா்.
முன்னதாக, விவசாயி முருகேசனை போலீஸாா் தாக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.