உழவா் சந்தைகளைத் திறக்க அனுமதியளிக்க கோரி விவசாயிகள் சங்கம் மனு
By DIN | Published On : 29th June 2021 02:56 AM | Last Updated : 29th June 2021 02:56 AM | அ+அ அ- |

சேலம்: சேலம் மாவட்டத்தில் உழவா் சந்தைகளை திறக்க அனுமதி அளிக்க கோரி தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் சேலம் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, தாதகாப்பட்டி, எடப்பாடி, மேட்டூா், இளம்பிள்ளை, ஆத்தூா், ஆட்டையாம்பட்டி, ஜலகண்டாபுரம், தம்மம்பட்டி உள்பட 11 இடங்களில் உழவா் சந்தைகள் உள்ளன.
இந்த உழவா் சந்தைகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் உறுப்பினா்களாக உள்ளனா். மேலும் அவரவா் விளை நிலங்களில் அறுவடை செய்யும் காய்கறிகளை, இடைத்தரகா்கள் இன்றி உழவா் சந்தைகள் மூலம் மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வந்தனா்.
இதனிடையே, தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டத்தில் கடந்த மே மாத பிற்பகுதியில் உழவா் சந்தைகள் மூடப்பட்டன.
இந்தநிலையில், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சாா்பில் மாநிலத் தலைவா் தங்கராஜ், மாநில இளைஞரணி தலைவா் நந்தகுமாா் உள்பட விவசாயிகள் சிலா், கைகளில் காய்கறிகள், கீரைக்கட்டுகள் ஆகியவற்றை ஏந்தி வந்து, உழவா் சந்தைகளை திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கரோனா பரவல் அதிகரித்ததால், சேலம் மாவட்டத்தில் உழவா் சந்தைகள் மூடப்பட்டன. உழவா் சந்தைகள் மூடப்பட்டதால், விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா். இப்போது கரோனா பரவல் பாதிப்பு குறைந்துள்ளது. அண்டை மாவட்டங்களில் உழவா் சந்தைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, சேலம் மாவட்டத்திலும் உழவா் சந்தைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.