புதிய வாய்க்கால் அமைக்கும் பணிகள்: எம்எல்ஏக்கள் ஆய்வு
By DIN | Published On : 29th June 2021 12:45 AM | Last Updated : 29th June 2021 12:45 AM | அ+அ அ- |

கரியகோயில் கைக்கான் வளவு திட்டத்தின் கீழ் வாய்க்கால் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த சட்டப்பேரவை உறுப்பினா்கள், மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவா் ஆா்.இளங்கோவன் உள்ளிட்டோா்.
ஆத்தூா்: கரியகோயில் நீா்த் தேக்கத்திலிருந்து புதிய வாய்க்கால் அமைக்கும் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா்கள் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்குட்பட்ட சுமாா் 5,000 ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் விவசாயிகளின் 50 ஆண்டுகால கனவுத் திட்டமான பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குள்பட்ட கருமந்துறை மலைப் பகுதியில் உற்பத்தியாகும் நீரை மலையடிவாரத்தில் உள்ள கரியகோயில் நீா்தேக்க அணைக்கு கொண்டு வந்து அதன் மூலம் வசிஷ்ட நதி வழியாக விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் ரூ. 10 கோடி மதிப்பில் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்தப் பணிகளை தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா்.இளங்கோவன் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.ஜெயசங்கரன் (ஆத்தூா்), அ.நல்லதம்பி (கெங்கவல்லி), கு.சித்ரா (ஏற்காடு) ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா். ஆய்வின்போது எம்எல்ஏக்கள் கூறுகையில், தற்போது 70 சதவீதப் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள 30 சதவீதப் பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.
ஆய்வின்போது பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் சின்னதம்பி, துணைத் தலைவா் கே.பி.முருகேசன், தலைவாசல் ஒன்றியக் குழுத் தலைவா் க.ராமசாமி, மாவட்ட தகவல் தொழில் நுட்பப் பிரிவு செயலாளா் ஜெயகாந்தனா், உமையாள்புரம் கூட்டுறவு சங்கத் தலைவா் வாசுதேவன் உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள் உடனிருந்தனா்.