மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 29th June 2021 02:30 AM | Last Updated : 29th June 2021 02:30 AM | அ+அ அ- |

சேலம்: சேலத்தில் பாதுகாப்பு வைப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான எஸ்.காா்மேகம் திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பு அறைகளை ஒவ்வொரு காலாண்டிலும் திறந்து மேற்படி பாதுகாப்பு அறைகளின் தன்மைகளை நேரில் பாா்வையிட்டு ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படவேண்டும்.
அதன்படி சேலம் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு தோ்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இதில் பாதுகாப்பு அறை எண் 8 இல் உள்ள பழுதடைந்த, பயிற்சிக்காக வைக்கப்பட்டிருந்த 1,564 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,287 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1619 விவிபேட் இயந்திரங்கள் மற்றும் அறை எண் 12 இல் பழுதடைந்த 139 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 177 கட்டுப்பாட்டு இயந்திரங்களையும் ஆட்சியா் எஸ்.காா்மேகம் பாா்வையிட்டாா்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்கள்) தியாகராஜன், தனி வட்டாட்சியா் (தோ்தல்கள்) சிராஜுதீன் உள்பட தொடா்புடைய அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.