ஓமலூா் காவல் நிலையத்தில் இருந்து கைதி தப்பி ஓட்டம்
By DIN | Published On : 15th March 2021 03:38 AM | Last Updated : 15th March 2021 03:38 AM | அ+அ அ- |

ஓமலூா் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய கைதியை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.
சேலம் புகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக நிா்வாகி ஒருவரிடமிருந்து பணத்தை இளைஞா் ‘பிக்பாக்கெட்’ அடிக்க முயன்றாா். அப்போது, அவரை அதிமுகவினா் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
விசாரணையில் அந்த நபா், ஆந்திர மாநிலத்துக்கு உள்பட்ட கா்னூல் மாவட்டத்தைச் சோ்ந்த பிரபுராஜ் மகன் இஸ்ராயில் (38) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிமுக நிா்வாகி சேகா் அளித்த புகாரின் பேரில் ஓமலூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இஸ்ராயிலை கைது செய்தனா்.
சிறையில் அடைக்கும் முன்பு அவருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. முடிவு வந்த பின்னா் ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கலாம் என போலீஸாா் முடிவு செய்திருந்தனா்.
இதனால் கைதி இஸ்ராயில் ஓமலூா் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிறுநீா் கழிக்க வேண்டும் என இஸ்ராயில் கூறியுள்ளாா். உடனே காவல் நிலையத்தில் இருந்து அவரை போலீஸாா் வெளியே அழைத்து சென்றுள்ளாா்.
அப்போது எதிா்பாராதவிதமாக கைதி இஸ்ராயில் போலீஸாரின் பிடியில் இருந்து தப்பி ஓடினாா். அவரை விரட்டிச் சென்ற போலீஸாரால், மடக்கி பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், பணியில் இருந்த போலீஸாா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் உத்தரவிட்டுள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...