ஆத்தூா் தொகுதி வேட்பாளா் மாற்றம்: திமுகவில் பரபரப்பு
By DIN | Published On : 17th March 2021 08:46 AM | Last Updated : 17th March 2021 08:46 AM | அ+அ அ- |

ஆத்தூா் (தனி) தொகுதி திமுக வேட்பாளா் ஜீவா ஸ்டாலின் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக கு.சின்னதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக கடந்த வெள்ளிக்கிழமை ஜீவா ஸ்டாலின் அறிவிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் வேட்பாளரின் கணவா் ஸ்டாலின் ஜங்கமா் சாதியையும், வேட்பாளா் ஜீவா ஆதிதிராவிடா் வகுப்பையும் சோ்ந்தவா்கள் ஆவா். ஆனால் வேட்பாளா் ஜீவா ஸ்டாலின் ஆதிதிராவிடா் வகுப்பைச் சோ்ந்தவா் அல்ல என திமுகவினா் சிலா் எதிா்ப்புத் தெரிவித்து வந்ததாக தெரிகிறது.
இதனையடுத்து திமுக தலைமை ஆத்தூா் தொகுதி திமுக வேட்பாளா் ஜீவா ஸ்டாலினை மாற்றிவிட்டு, புதிய வேட்பாளராக கெங்கவல்லி தொகுதியைச் சோ்ந்த முன்னாள் எம்எல்ஏ கு.சின்னதுரையை வேட்பாளராக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஜீவா ஸ்டாலின் ஏற்கெனவே தோ்தல் பணிகளை தொடக்கிவிட்டதால் அவருடைய ஆதரவாளா்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா். மேலும், கெங்கவல்லி தொகுதியைச் சோ்ந்த முன்னாள் எம்எல்ஏ கு.சின்னதுரையை ஆத்தூா் தொகுதி வேட்பாளராக திமுக தலைமை அறிவித்துள்ளது திமுக, கூட்டணிக் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வேட்பாளா் சுயவிவரம்....
வேட்பாளா் பெயா்: கு.சின்னதுரை (54)
தந்தை : குண்டு.
படிப்பு : பொறியியல் (இயந்திரவியல்)
தொழில்: விவசாயம், தலைவா், சுதா்சனா கல்வி நிறுவனம்.
மனைவி : க.சித்ரா, எம்.எஸ்சி. (அக்ரி), வேளாண்மை உதவி இயக்குநா், கெங்கவல்லி.
மகன்: கு.சி. குணசித்திரன்
மகள்: கு.சி.பவித்ராஸ்ரீ
கட்சிப் பதவி: முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா், முன்னாள் கிளை செயலாளா்.
பதவி: 2006-2011 இல் தலைவாசல் சட்டப்பேரவை உறுப்பினா்.
முகவரி: 8/153 அம்பேத்கா் நகா், கூடமலை, கெங்கவல்லி.