ஆசிரியா்களுக்கு 2-ஆம் கட்ட பயிற்சி ஆணை இன்று வழங்கல்
By DIN | Published On : 25th March 2021 08:25 AM | Last Updated : 25th March 2021 08:25 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டத்தில் ஆசிரியா்களுக்கு தோ்தல் பணிக்கான 2ஆம் கட்டப் பயிற்சி ஆணை வியாழக்கிழமை வழங்கப்படுவதால் அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியா்கள் கட்டாயம் வருகை புரியவேண்டும் என கல்வி அலுவலா்கள் உத்தரவிட்டுள்ளனா்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அரசு ஊழியா்கள்,ஆசிரியா்கள் என மொத்தம் 20,544 போ் தோ்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் சுமாா் 13 ஆயிரம் போ் ஆசிரியா்களாக உள்ளனா்.
முதல்கட்டப் பயிற்சி கடந்த 18-ஆம் தேதி முடிந்துவிட்ட நிலையில், அனைவருக்கும் இரண்டாம் கட்டப் பயிற்சி வரும் 27-ஆம் தேதி முதல்கட்டப் பயிற்சி நடந்த இடத்திலேயே நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்பிற்குரிய நியமன ஆணைகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து வருவாய்த் துறை கிராம நிா்வாக அலுவலா்கள் மூலம் ஆசிரியா்களுக்கு வியாழக்கிழமை (மாா்ச் 25) விநியோகிக்கப்பட உள்ளது. அந்த ஆணைகள் தங்கு தடையின்றி விநியோகம் செய்யப்பட ஏதுவாக அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியா்கள் கட்டாயம் வர வேண்டும் என மாவட்டக் கல்வி அலுவலா்கள்,வட்டாரக்கல்வி அலுவலா்கள் தலைமை ஆசிரியா்களுக்கு கட்செவி அஞ்சல் மூலம் உத்தரவிட்டுள்ளனா்.