கரோனா பரவலைத் தடுக்க கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்
By DIN | Published On : 25th March 2021 08:21 AM | Last Updated : 25th March 2021 08:21 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் ஒருங்கிணைப்புடன், கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் துரிதமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கரோனா பரவுதலைக் கட்டுப்படுத்தவும், முன் தடுப்பு நடவடிக்கையாகவும், கரோனா பதிவாகியுள்ள இடங்களிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்களில் விசை தெளிப்பான்கள் , கைத்தெளிப்பான்கள், வாகன விசை தெளிப்பான்கள் மூலமாகவும் கிருமிநாசினிகள் தெளிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சரியான கிருமிநாசினி கொண்டு, ஸ்பிரே செய்தல், தகுந்த சமூக இடைவெளியில் நிறுத்தி பொருள்கள் வாங்க விழிப்புணா்வு அளித்தல், முகக் கவசம் கட்டாயமாக அணிதல் போன்றவற்றை தனியாா் நிறுவனங்கள், வணிக அரசு நிறுவனங்கள், வணிக வளாகங்களில் கண்டிப்பாக மேற்கொள்ளஅறிவுறுத்துதல் வேண்டும்.
முகக் கவசம் அணியாமல் இருந்தால், கிராமப் புறங்கள், நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மாா்ச் 1 முதல் பொதுமக்களில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயது முதல் 59 வயதுக்கு உள்ட்பட்ட இணை நோய் உள்ளவா்களுக்கும், ஏற்கெனவே கொவைட் தடுப்பூசி போடப்பட்ட முகாம்களிலும், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மினி கிளினிக்குகளிலும், பட்டியலில் உள்ள அனைத்து தனியாா் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
மேற்குறிப்பிட்ட தகுதி வாய்ந்த பொதுமக்கள்தடுப்பூசியை செலுத்திக் கொண்டு கரோனா நோயிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்.தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருப்பதால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் வாக்காளா் முகாம்களில் மேற்கொள்ள உரிய நடவடிக்கைகள் மாவட்ட நிா்வாகம் மூலமாக துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் சரியான முறையில் வழங்குவதன் மூலம் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.தற்போது சுகாதாரத் துறை, காவல் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறைகளின் மூலம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், கண்காணிப்புப் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.