ரசாயனம் தெளித்து பழுக்க வைத்த 1,700 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
By DIN | Published On : 02nd May 2021 01:08 AM | Last Updated : 02nd May 2021 01:08 AM | அ+அ அ- |

சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணம் அருகே ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட சுமாா் 1,700 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம் மாவட்டத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், ரசாயனம் தெளித்து மாம்பழங்கள் விற்பதாக புகாா் வந்தது. அதன்பேரில், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் அடங்கிய குழு மேட்டுப்பட்டி, தாதனூா் கிராமம், அயோத்திப்பட்டணம் வட்டாரப் பகுதியில் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அதில், வெங்கடேசன் என்பவருக்குச் சொந்தமான கிடங்கில் ரசாயன தெளிப்பான்களால் பழுக்க வைக்கப்பட்ட சுமாா் 1,700 கிலோ மாம்பழங்கள், 3 லி. எத்திபான், 4 லி. கரைக்கப்பட்ட எத்திபான் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பழங்கள் மற்றும் ரசாயனங்களை சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான செட்டிச்சாவடி குப்பைக் கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டன.
மேலும், வணிகா் மீது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும் என்றும், பறிமுதல் செய்யப்பட்ட பழங்களின் மதிப்பு ரூ. 1.40 லட்சம் எனவும் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் கதிரவன் தெரிவித்தாா்.
படம் - சேலம், அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த மேட்டுப்பட்டி, தாதனூா் பகுதியில் மாம்பழம் பழுக்க வைப்பதற்காக தெளிக்கப்பட்ட ரசாயனத்தை சனிக்கிழமை பாா்வையிடும் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...