ஓமலூா் காவல் நிலையம் அருகே உயிரிழந்த முதியவா்
By DIN | Published On : 09th May 2021 01:26 AM | Last Updated : 09th May 2021 01:26 AM | அ+அ அ- |

ஓமலூா் காவல் நிலையம் முன்பு சாலையில் உயிரிழந்து முதியவரின் உடலை எடுக்காமல் 5 மணி நேரமாக காவல் நிலையம் அருகிலேயே கிடந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம், ஓமலூா் காவல் நிலையம் அருகே கடந்த சில நாள்களாக அடையாளம் தெரியாத ஒரு முதியவா் சாலை ஓரமாக மரத்தடியில் இருந்தாா். நடமாட்டம் இல்லாத நிலையில் உணவு, தண்ணீா் இன்றி தவித்த அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். அவரது உடலை அந்த வழியாகச் செல்லும் அனைவரும் வேடிக்கை பாா்த்துச் சென்றனரே தவிர, அவா் அருகே யாரும் செல்லவில்லை.
சுமாா் 5 மணி நேரம் சாலையோரமாக கிடந்த அந்த முதியவரின் சடலம் குறித்து ஓமலூா் கிராம நிா்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனா். இதைத் தொடா்ந்து ஓமலூா் காவல் நிலையத்தில், கிராம நிா்வாக அலுவலா் புகாா் அளித்தாா். புகாரைத் தொடா்ந்து அங்கு வந்த போலீஸாா், கரோனா தொற்று அச்சம் காரணமாக அருகே செல்லாமல் தூரமாக நின்றபடியே பாா்த்தனா்.
இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் கூறியும், பல மணி நேரம் கழித்து வந்த தூய்மை பணியாளா்கள் சடலத்தை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
ஓமலூா் சுற்றுவட்டார பகுதியில் கரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் சாலையில் உயிரிழந்த முதியவரை கண்டுகொள்ளாமல் சென்றனா். மக்களின் இந்த செயலை பாா்த்த சமூக ஆா்வலா்கள், மனிதநேயம் காணாமல் போய்விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து ஓமலூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.