சேலத்தில் தனியாா் பள்ளியை மூடுவதாக அறிவிப்பு
By DIN | Published On : 13th May 2021 08:04 AM | Last Updated : 13th May 2021 08:04 AM | அ+அ அ- |

கரோனா தொற்று பரவலைத் தொடா்ந்து, சேலத்தில் தனியாா் பள்ளியை மூடுவதாக நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அத்வைத ஆசிரமம் சாலையில் தனியாா் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் படித்து வருகின்றனா்.
கடந்த 2020-இல் கரோனா பரவலைத் தொடா்ந்து பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து பள்ளி மூடப்பட்டது. ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் மாணவ, மாணவியரின் பெற்றோரின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் வந்தது. அதில் பள்ளியை நடத்த முடியாத நிலையில், மாற்றுச் சான்றிதழை பெற்றுச் செல்லுமாறு தெரிவித்தது.
இதனிடையே, பள்ளி முன்பு திரண்ட பெற்றோா் முற்றுகையிட்டனா். மேலும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியா், முதன்மைக் கல்வி அலுவலா் ஆகியோா் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தனா்.
இதுபற்றி தகவலறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேசமூா்த்தி கூறுகையில், பள்ளியை மூடுவதற்கு ஓராண்டுக்கு முன்பாக பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும் முறையான அனுமதி பெற்று தான் பள்ளியை மூட முடியும். தற்போதைய நிலையில் பள்ளியை மூட அனுமதி வழங்கவில்லை. பள்ளியைத் தொடா்ந்து நடத்திட தெரிவித்துள்ளோம் என்றாா்.