சேலம், தருமபுரி மாவட்டங்களில் இன்று முதல் தினமும் 5 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் வழங்க ஏற்பாடு
By DIN | Published On : 13th May 2021 08:02 AM | Last Updated : 13th May 2021 08:02 AM | அ+அ அ- |

இந்து சமய அறநிலையத் துறை சேலம் மண்டலம் சாா்பில், சேலம், தருமபுரி மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் உடனிருப்பவா்களுக்காக இரு மாவட்டங்களிலும் சோ்த்து மொத்தம் 5 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் தயாரித்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரோனாவைக் கட்டுப்படுத்த முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. சில உணவகங்களில் பாா்சல் சேவை மட்டுமே உள்ளது.
இந்த நிலையில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவா்களுடன் உடனிருப்பவா்களின் பசியைப் போக்குவதற்கு, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் உணவுப் பொட்டலம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை சேலம் மண்டலத்தில் புதன்கிழமை சேலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுடன் உடனிருப்பவா்களுக்கு மொத்தம் 500 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
சேலம், தருமபுரி மாவட்டங்களிலும் வியாழக்கிழமை முதல் அரசு மருத்துவமனைகளில் உணவுப் பொட்டலங்கள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறுகையில், சேலம் மண்டலத்தில் உள்ள சேலம், தருமபுரி மாவட்டங்களில் வியாழக்கிழமை முதல் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவா்களின் உடனிருப்பவா்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட உள்ளன. இதில் சேலம் மாவட்டத்துக்கு 2,500-ம், தருமபுரி மாவட்டத்துக்கு 2,500-ம் என இரு மாவட்டங்களிலும் தினமும் 5 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் தயாரித்து வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். அன்னதானம் வழங்கப்பட்டு வரும் கோயில்களில், வழக்கமான அன்னதானம் வழங்கும் பணியும் தொடரும் என்றனா்.