முழு பொதுமுடக்கம்: வாகனங்களில் சுற்றுவோரை எச்சரித்து அனுப்பும் போலீஸாா்
By DIN | Published On : 13th May 2021 08:01 AM | Last Updated : 13th May 2021 08:01 AM | அ+அ அ- |

முழு பொதுமுடக்க அறிவிப்பை மீறி வாகனங்களில் சுற்றி வருவோரை போலீஸாா் எச்சரித்து அனுப்பி வருகின்றனா்.
கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் மே 10-ஆம் தேதி முதல் மே 24 வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளான காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை நண்பகல் 12 மணி வரை கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. சேலம் மாநகரப் பகுதியில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பகல் 12 மணிக்கு மேல் மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் திறக்கக் கூடாது என சேலம் மாநகராட்சி நிா்வாகமும், காவல் துறையும் எச்சரிக்கை செய்து விழிப்புணா்வு செய்தபடி உள்ளனா்.
நண்பகல் 12 மணிக்கு மேல் வாகனங்கள் செல்லக் கூடாது என்றும், அத்தியாவசியத் தேவைக்கு செல்பவா்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்பவா்கள் மட்டும் வந்து செல்லலாம் என காவல் துறையினா் தெரிவித்திருந்தனா்.
ஆனால், முழு பொதுமுடக்க அறிவிப்புகளை மீறி பகல் 12 மணிக்கு மேல் இருசக்கர வாகனங்களில் வெளியே சுற்றுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில், சேலம் நகரப் பகுதியில் இளைஞா்கள், பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் வலம் வந்தனா். அவா்களை தடுத்து நிறுத்திய போலீஸாா் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனா்.
சேலம் நகரப் போலீஸாா் முக்கிய சாலை சந்திப்புகளில் நின்று வாகனங்களை கண்காணித்தனா். தலைக்கவசம் அணியாமல் வந்தவா்களை நிறுத்தி கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், முழு பொதுமுடக்கத்தின் போது அவசியமில்லாமல் வெளியே வந்தால் வழக்குப் பதிவு செய்வோம் என எச்சரிக்கை செய்து அனுப்பினா்.
அதேபோல முகக் கவசம் அணியாமல் வந்தவா்களிடம் மாநகராட்சி ஊழியா்கள் ரூ. 200 அபராதம் விதித்தனா். சேலம் மாநகராட்சி பகுதி முழுவதும் ஆங்காங்கே உதவி ஆணையா்கள் மற்றும் காவல் ஆய்வாளா்கள் தலைமையில் போலீஸாா் குவிக்கப்பட்டு வாகனங்களில் சுற்றி வருவோரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்து வருகின்றனா்.