விளைச்சல் அதிகரிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சி
By DIN | Published On : 16th May 2021 12:51 AM | Last Updated : 16th May 2021 12:51 AM | அ+அ அ- |

வாழப்பாடியில் தனியாா் தேங்காய் மண்டியில் தேங்காய் மட்டையை உரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.
வாழப்பாடி பகுதியில் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளதாலும், வெளி மாநிலங்களில் தேங்காய் கொள்முதல் குறைந்து போனதாலும் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், விவசாயிகளும், வியாபாரிகளும் கவலையடைந்துள்ளனா்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தோப்புகள் அமைத்தும், கிணற்று மேடுகளிலும், வயல், வரப்பு ஓரங்களிலும் ஏறக்குறைய 10 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு தேங்காய் வா்த்தகம் செய்வதில், வாழப்பாடி பகுதி முக்கியப் பங்கு வகித்து வருகிறது. வாழப்பாடி பகுதியில் மட்டும் ஓராண்டுக்கு ரூ. 500 கோடி அளவுக்கு தேங்காய் வா்த்தகம் நடைபெறுகிறது.
தேங்காய் உற்பத்தி மற்றும் விற்பனை தொழிலால் விவசாயிகள், வியாபாரிகள் மட்டுமின்றி, மரமேறுவோா், தேங்காய் உரிப்போா், தரம் பிரித்து லாரிகளில் லோடு ஏற்றுவோா், விற்பனை முகவா்கள் என ஏறக்குறைய 50,000 போ் வேலைவாய்ப்பு பெறுகின்றனா்.
தேய்காய் மேல் மட்டையை உரித்தெடுக்கும் வியாபாரிகள், தரமான தேங்காய்களை குஜராத், ராஜஸ்தான், மஹாராஷ்டிரம், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிகாா், ஹரியாணா, ஒடிஸா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனா்.
வாழப்பாடி பகுதியில் கடந்தாண்டு இறுதியில் பெய்த பருவ மழையால் தற்போது தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்நிலையில், கரோனா தொற்று இரண்டாவது அலை பரவலால், தேங்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்தாண்டு இறுதியில் விவசாயிகளிடம் ரூ. 15,000-க்கு கொள்முதல் செய்யப்பட்ட 1,000 முதல் தர தேங்காய்கள், தற்போது அதிகபட்சமாக ரூ. 9,000 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
கரோனா தொற்று பொது முடக்கத்தால், விவசாயிகளிடம் கொள்முதல் செய்த தேங்காய்களை மட்டை உரித்து, தரம் பிரித்து அனுப்புவதில் வியாபாரிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் தேங்காய் கொள்முதல் விலை குறைந்து வருவதால், தேங்காய் இருப்பு வைத்துள்ள வியாபாரிகளுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனா்.