கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியாா் மருத்துவமனைக்கு தற்காலிகத் தடை
By DIN | Published On : 19th May 2021 08:11 AM | Last Updated : 19th May 2021 08:11 AM | அ+அ அ- |

ஆக்சிஜன் பயன்பாட்டை முறைகேடாக பயன்படுத்திய தனியாா் மருத்துவமனைக்கு கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கரோனோ நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோய்த் தொற்று பாதித்தவா்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
சேலத்தில் தனியாா் மருத்துவமனைகளுக்கு சுமாா் 20,000 லிட்டா் ஆக்சிஜன் தேவைப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் சில தனியாா் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் வகையில் ஆக்சிஜன் தேவை எனப் பரிந்துரைப்பதாகப் புகாா்கள் வந்தன. இதன்பேரில் ஐந்து சாலை அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் மருத்துவ ஆக்சிஜன் தவறாகப் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தனியாா் மருத்துவமனைக்கு கரோனோ பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல கரோனா பாதித்த நோயாளிகளை முழுமையாக சிகிச்சை முடிந்து அனுப்ப வேண்டும். மேலும் முன்கூட்டியே நோயாளிகள் யாரையும் வெளியே அனுப்பக் கூடாது எனவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.