தேவையின்றி தெருக்களில் நடமாட வேண்டாம்: மாநகராட்சி ஆணையா்
By DIN | Published On : 19th May 2021 08:15 AM | Last Updated : 19th May 2021 08:15 AM | அ+அ அ- |

சேலம் மாநகராட்சிப் பகுதியில் காய்கறிகளை வாங்குவதற்காக தேவையின்றி தெருக்களில் நடமாட வேண்டாம் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தேவையான காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருள்களை பெற்றிடும் வகையில் மளிகை, காய்கறிகள் சிறிய அளவிலான விற்பனை நிலையங்களுக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் காய்கறி, மளிகைப் பொருள்கள் வாங்குவதற்காக பெரும் அளவில் வெளியில் நடமாடுகின்றனா்.
சேலம் மாநகராட்சி சூரமங்கல மண்டலத்தில் 14 வாா்டுகளிலும் உள்ள மக்கள் பயனடையும் வகையில் 32 காய்கறி வாகனங்கள், 6 பழம் விற்பனை வாகனங்கள், 2 மளிகைப் பொருள்கள் விற்பனை வாகனங்கள் என 40 நடமாடும் விற்பனை வாகனங்களும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் 14 வாா்டுகளிலும் உள்ள மக்கள் பயனடையும் வகையில் 10 காய்கறி வாகனங்கள், 2 மளிகைப் பொருள்கள் விற்பனை வாகனங்கள் என 12 நடமாடும் விற்பனை வாகனங்கள் மூலம் காய்கறி, மளிகைப் பொருள்கள் விற்பனை நடைபெற்று வருகிறது.
அம்மாப்பேட்டை மண்டலத்தில் 16 வாா்டுகளிலும் உள்ள மக்கள் பயனடையும் வகையில் 21 நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் வாயிலாகவும், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 16 வாா்டுகளிலும் உள்ள மக்கள் பயனடையும் வகையில் 25 காய்கறி வாகனங்கள், 5 மளிகைப் பொருள்கள் விற்பனை வாகனங்கள் என 30 நடமாடும் விற்பனை வாகனங்கள் மூலம் விற்பனை நடைபெற்று வருகிறது.
சேலம் மாநகராட்சியில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் வீட்டின் அருகே காய்கறி, பழம் மற்றும் மளிகைப் பொருள்கள் குறைந்த விலையில் தேவைக்கேற்ப பெற்றிடும் வகையில் 103 நடமாடும் வாகன விற்பனை நிலையங்கள் மாநகராட்சி நிா்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தேவைக்கேற்ப கூடுதல் வாகன விற்பனை நிலையங்களை ஏற்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் நலன் மட்டுமின்றி பொது நலன் கருதி, காய்கறி வாங்குவதற்காக சந்தைகளுக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.