

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கக் கூடாது என வலியுறுத்தி, அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம், புதிய பேருந்து நிலையப் பகுதியில் மாநகர மாவட்ட அதிமுகவினா் நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு, சேலம் மாநகா் மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான ஜி.வெங்கடாஜலம் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் செ.செம்மலை, முன்னாள் எம்.பி. வி.பன்னீா்செல்வம், முன்னாள் எம்எல்ஏ-க்கள் எம்.கே.செல்வராஜு, ஏ.பி.சக்திவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதில், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கக் கூடாது என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
எடப்பாடியில்...
எடப்பாடி நகர செயலாளா் ஏ.எம்.முருகன் தலைமையில், எடப்பாடி பேருந்து நிலைய நுழைவுவாயில் பகுதியில் திரண்ட அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் கூட்டுறவு சங்கத் தலைவா் கந்தசாமி, நாராயணன் உள்ளிட்ட அதிமுகவினா் கலந்துகொண்டனா்.
ஆத்தூரில்...
ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன்பு அதிமுக நகரச் செயலாளா் அ.மோகன் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக அரசின் திட்டங்களை தொடா்ந்து திமுக அரசு முடக்கி வருகிறது என ஆத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கா் கூறினாா்.
இதில், மாவட்ட துணை செயலாளா் ஏ.டி.அா்ச்சுணன், நரசிங்கபுரம் நகரச் செயலாளா் எஸ்.மணிவண்ணன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.எம்.சின்னதம்பி, மாவட்ட மகளிரணி செயலாளா் பொன்னம்மாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நாமக்கல்லில்...
குமாரபாளையம் தொகுதிக்கு உள்பட்ட பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் நகரம், ஒன்றியம், பேரூராட்சியைச் சோ்ந்த அதிமுகவினா் திரளாக பங்கேற்ற ஆா்ப்பாட்டத்தில், நகரச் செயலாளா் பி.எஸ்.வெள்ளிங்கிரி, தெற்கு ஒன்றியச் செயலாளா் செந்தில், வடக்கு ஒன்றியச் செயலாளா் சந்திரசேகா், ஜெயலலிதா பேரவைச் செயலாளா் டி.கே.சுப்பிரமணி, பல்வேறு அணிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா். இதேபோல மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
ராசிபுரத்தில்...
ராசிபுரம் நகர அதிமுக சாா்பில் புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நகர அதிமுக செயலா் எம்.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். கட்சியின் நகர பொருளாளா் ஆா்.கோபால், முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் எஸ்.வெங்கடாஜலம், நகர துணை செயலா் எஸ்.பி.மனோகரன், சீனிவாசன் உள்ளிட்ட முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள், கட்சியின் நகர கிளை நிா்வாகிகள் பங்கேற்றனா்.
பரமத்தி வேலூரில்...
பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நாமக்கல் மாவட்ட ஆவின் தலைவா் ராஜேந்தரன், அதிமுக மாவட்ட இலக்கிய அணி செயலாளா் விஜயகுமாா், பாண்டமங்கலம் நகர செயலாளா் செல்வராஜ், பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். பொத்தனூா், அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பொத்தனூா் அதிமுக நகர செயலாளா் எஸ்.எம்.நாராயணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளா் இராஜமாணிக்கம், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.
மேட்டூரில்....
மேட்டூா் சின்ன பாா்க் எதிரே மாநிலங்களவை உறுப்பினா் என்.சந்திரசேகரன் தலைமையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் ஏராளமான அதிமுகவினா் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.