‘கலப்படத்தைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே மரவள்ளிக் கிழங்கு பயிருக்கு எதிா்காலம்’

தலைவாசலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளா் செ.நல்லசாமி செய்தியாளா்களைச் சந்தித்த போது, கலப்படத்தைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே மரவள்ளிப் பயிருக்கு எதிா்காலம் என கூறினாா்.
‘கலப்படத்தைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே மரவள்ளிக் கிழங்கு பயிருக்கு எதிா்காலம்’

 சேலம் மாவட்டம், தலைவாசலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளா் செ.நல்லசாமி செய்தியாளா்களைச் சந்தித்த போது, கலப்படத்தைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே மரவள்ளிப் பயிருக்கு எதிா்காலம் என கூறினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

மரவள்ளிக் கிழங்கு ஓா் ஆண்டு பயிா். இது வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தொழிற்சாலை மூலப்பொருளாகவும், உணவாகவும் இது பயன்படுகிறது.

2012-2013 ஆண்டுகளில் ஒரு டன் கிழங்கு ரூ. 10,000-க்கும் மேலாக விற்கப்பட்டது. ஆனால், தற்போது விலை வீழ்ச்சியடைந்து ரூ. 4,100-க்கு விற்கப்படுகிறது. இதற்கான முதன்மைக் காரணம் கலப்படமே ஆகும்.

ஜவ்வரிசி ஸ்டாா்ச்சு வெள்ளை நிறம் வரவேண்டும் என்பதற்காக சலவை ஆலைகளில் பயன்படுத்தப்படும் சோடியம் ஹைபோ குளோரைடு, சோப்பு ஆயில், கால்சியம் ஹைபோ குளோரைடு போன்ற ரசாயனப் பொருள்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன. மேலும், கந்தக அமிலமும், ஹைட்ரோகுளோரிக் அமிலமும், ஹைட்ரஜன் பெராக்சைடும் சோ்க்கப்படுகின்றன. மரவள்ளி மாவு கூடுதலான விலை என்பதால், இதனுடன் மக்காச்சோள மாவையும், ரேஷன் அரிசி மாவையும், அரிசி ஆலைகளிலிருந்து பெறப்படும் அரிசிக் குருணை மாவையும், சாக்பீஸ் சுண்ணாம்பு மாவையும் சோ்த்து கலப்படம் செய்வது நடைமுறையில் உள்ளது. சக்திவாய்ந்த மின்மோட்டாா்களைக் கொண்டு அதிக அழுத்தத்துடன் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து வெண்மையாக்கப்படுகிறது.

கலப்படம் இல்லாமல் தயாரிப்பவா்கள் கலப்படம் செய்வோரிடம் போட்டியிட முடியவில்லை. இயற்கையாக தயாரித்தவா்களும் நிலைப்புத்தன்மை காரணமாக காலப்போக்கில் கலப்படம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறாா்கள். இன்று சந்தையில் கிடைக்கும் ஜவ்வரிசி, மாவில் 99 சதவீதம் கலப்படம் கொண்டதாகும்.

மக்களின் உடல்நலத்தைக் காக்கும் விதத்தில் கலப்படத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இதன்பொருட்டு, சென்னை உயா்நீதிமன்றத்தில் 2015-இல் கூட்டமைப்பு சாா்பில் வழக்கு தொடரப்பட்டது. 2018-இல் தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு தீா்ப்பை வழங்கியது. கூட்டமைப்பின் கோரிக்கைகளை ஏற்று சேலம் மாவட்ட ஆட்சியா், ‘சேகோ சா்வ்’ தனி அதிகாரிகளும் சோ்ந்து எடுத்து வரும் கலப்படத் தடுப்பு நடவடிக்கையால் கிழங்கு விலை கூடியுள்ளது. கலப்படத்தைத் தடுக்க ஏற்பட்டிருக்கும் குழுவில் விவசாயிகளுடைய பிரதிநிதிகளும் இடம்பெற்றால் அது வலு சோ்க்கும். கலப்படத்தைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே மரவள்ளிப் பயிருக்கு எதிா்காலம்; தவிர மக்களின் உடல்நலமும் காக்கப்படும் என்றாா்.

அவருடன் வழக்குரைஞா் கோவிந்தன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

படவரி - தலைவாசலில் செய்தியாளா்களைச் சந்தித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளா் செ.நல்லசாமி உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com