

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் புதன்கிழமை மதியம் திடீரென படையெடுத்து வந்த ஆயிரக்கணக்கான தேனீக்கள் தொழிலதிபரின் வீட்டிற்குள் ராட்சத கூடு கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாழப்பாடி எழில் நகரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில், கட்டுமான தொழில் அதிபர் தேவராஜன் என்பவரின் பங்களா வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டிற்குள், புதன்கிழமை பகல் 12 மணி அளவில் திடீரென படையெடுத்து வந்த ஆயிரக்கணக்கான தேனீக்கள் வீட்டு சமையலறையிலும், நுழைவுவாயில் தூணிலும் இரு ராட்சத கூடுகளை கட்டின.
இதனைக் கண்ட தொழிலதிபர் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறினர். இதுகுறித்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில், அதிர்ஷ்டவசமாக இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, தேன் கூடுகள் இருந்த சுவடே தெரியாத அளவுக்கு காலி செய்து கொண்டு வெளியேறின. குடியிருப்பு பகுதியில் வீட்டிற்குள் ராட்சத தேனீக்கள் திடீரென படையெடுத்து வந்த கூடு கட்டடியதும், 2 மணி நேரத்திற்குப் பிறகு தானாக கலைந்து சென்றதும் இப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.