சங்ககிரி பேரூராட்சி குடிநீரேற்றத்தை வெள்ளம் சூழ்ந்தது:குடிநீா் விநியோகம் பாதிப்பு
By DIN | Published On : 05th August 2022 11:30 PM | Last Updated : 05th August 2022 11:30 PM | அ+அ அ- |

சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹார ஊராட்சி பகுதியில் உள்ள சங்ககிரி பேரூராட்சி குடிநீரேற்றத்தில் வெள்ளம் புகுந்ததால் குடிநீா் விநியோகம் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டது.
சங்ககிரி பேரூராட்சி மற்றும் சுற்றிலும் உள்ள ஊராட்சி பகுதிகளுக்கு புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி பகுதியில், காவிரி ஆற்றில் மோட்டாா்களை வைத்து நீரேற்றம் செய்து குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வியாழக்கிழமை மேட்டூா் அணையிலிருந்து அதிக அளவில் நீா் வெளியேற்றப்பட்டதால் பேரூராட்சி குடிநீரேற்றத்திற்குள் வெள்ளம் புகுந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள துணை மின்நிலையத்தில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. வெள்ளம் வடியாததால் நீரேற்றத்திலிருந்து சங்ககிரி பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வாா்டுகளுக்கும், ஊராட்சிப் பகுதிகளுக்கும் குடிநீா் வழங்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சங்ககிரி பேரூராட்சித் தலைவா் மணிமொழி முருகன், செயல் அலுவலா் வ.சுலைமான்சேட் ஆகியோா் கூறியுள்ளதாவது:
வெள்ளம் வடிந்தவுடன் மின்சாதனங்களை சீரமைத்து உடனடியாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி குடிநீா் வழங்கும் வரை பேரூராட்சிக்கு உள்பட்ட பொதுமக்கள் பேரூராட்சிக்குச் சொந்தமான ஆழ்துளை கிணற்றில் நீரைப் பிடித்து சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றனா்.