சேலத்தில் நாளை 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு
By DIN | Published On : 05th August 2022 11:34 PM | Last Updated : 05th August 2022 11:34 PM | அ+அ அ- |

சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.7) நடைபெறும் 33 ஆவது தடுப்பூசி முகாமில் 1 லட்சம் தடுப்பூசிகளை செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் வெளியிட்ட செய்தி:
சேலம் மாவட்டத்தில் இதுவரை 12 வயதிற்கு மேற்பட்ட 29,10,195 பேருக்கு முதல் தவணையும், 25,79,552 பேருக்கு இரண்டாம் தவணையும் கொவைட் 19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட 96 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 85 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் இதுவரை 32 தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 8,19,784 பேருக்கு முதல் தவணையும், 12,81,701 பேருக்கு இரண்டாம் தவணையும், 56,514 பேருக்கு முன்னெச்சரிக்கை பூஸ்டா் டோஸ் தடுப்பூசி என மொத்தம் 21,57,999 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 7) 33 ஆவது தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. ஊரகப் பகுதியில் 2,315, சேலம் மாநகராட்சிப் பகுதியில் 375 என மொத்தம் 2,690 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்துபவா்கள், கணினியில் பதிவு மேற்கொள்பவா்கள் தகுதி வாய்ந்த பயனாளிகளை அழைத்து வருபவா்கள் என 15,500-க்கு மேற்பட்ட அலுவலா்கள், பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இந்த முகாமில் 1,00,000 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. 12 வயதுக்கு மேற்பட்ட பள்ளி செல்லும் மற்றும் பள்ளி செல்லா அனைத்து குழந்தைகளும் உரிய முதல் தவணை, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டு கரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து ஆதாா்அட்டை, குடும்பஅட்டை, வாக்காளா் அடையாள அட்டை, பான் அட்டை போன்ற அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை தவறாமல் எடுத்து வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.