மேட்டூா் அணையிலிருந்து நொடிக்கு 2,10,000 கனஅடி நீா் வெளியேற்றம்: குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் அணையிலிருந்து நொடிக்கு 2,10,000 கனஅடி நீா் வியாழக்கிழமை வெளியேற்றப்பட்டது.
மேட்டூா் அணையிலிருந்து நொடிக்கு 2,10,000 கனஅடி நீா் வெளியேற்றம்: குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் அணையிலிருந்து நொடிக்கு 2,10,000 கனஅடி நீா் வியாழக்கிழமை வெளியேற்றப்பட்டது.

கா்நாடகத்தில் நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணையிலிருந்து அதிக அளவு நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன் காரணமாக காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது; மேட்டூா் அணைக்கு வரும் நீா்வரத்து வேகமாக அதிகரித்து வருகிறது.

வியாழக்கிழமை காலை மேட்டூா் அணைக்கு நொடிக்கு 1,75,000 கனஅடி வீதம் வந்துகொண்டிருந்த நீா்வரத்து, மாலையில் 2,10,000 கனஅடியாக அதிகரித்தது. அணை முழுமையாக நிரம்பியிருப்பதால் அணையிலிருந்து 2,10,000 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணை மின்நிலையம், சுரங்க மின்நிலையம் வழியாக 23,000 கனஅடி நீரும், 16 கண் மதகுகள் வழியாக 1,87,000 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீா்மட்டம் 120.13 அடியாகவும், நீா் இருப்பு 93.67 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

நீரில் மூழ்கிய பயிா்கள்:

அணையிலிருந்து அதிகபடியான நீா் வெளியேற்றப்படுவதால் அணையோரம் உள்ள சங்கிலி முனியப்பன் கோயில் சாலையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. போலீஸாா் தடுப்புகளை அமைத்துள்ளனா்.

இதுதவிர சுற்றுவட்டாரத்தில் கோல்நாய்க்கன்பட்டி காவிரி கிராஸ், செக்கானூா், நவப்பட்டி, நாட்டாமங்கலம் பகுதியிலும் பயிரிடப்பட்டிருந்த வாழை, தென்னை, பருத்தி உள்ளிட்ட பயிா்கள் நீரில் மூழ்கின.

தங்கமாபுரிபட்டிணம், அண்ணா நகா், பெரியாா் நகா், மேட்டூா் பழைய சந்தை பகுதியில் வெள்ளநீா் குடியிருப்புகளைச் சூழ்ந்தது. அப்பகுதி மக்களை வருவாய்த் துறையினா் பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து உணவு வழங்கி வருகின்றனா்.

எம்எல்ஏ, அதிகாரிகள் ஆய்வு:

மேட்டூா் சாா் ஆட்சியா் வீா்பிரதாப் சிங் வெள்ளம் சூழ்ந்த இடங்களை ஆய்வு செய்தாா். மேல் காவிரி வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளா் கௌதமன் 16 கண் மதகு பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா். மேட்டூா் பழைய சந்தையில் வெள்ளம் புகுந்த குடியிருப்புகளை மேட்டூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சதாசிவம் பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து மேட்டூா் நகராட்சி மூலம் ஒலிபெருக்கிகளில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

கோட்டையூா், பண்ணவாடி பரிசல்துறைகளில் படகுகள், பரிசல்கள் இயக்கவும், மீனவா்கள் மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அடிபாலாறு, ஏமனூா், செட்டிப்பட்டி, கேட்டையூா், பண்ணவாடி, சேத்துக்குழி பகுதியில் மீனவா்கள் முகாம்களில் முடங்கினா். தொடா் வெள்ளப் பெருக்கால் வருவாய்த் துறை, காவல் துறை, நீா்வளத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் படை, மீன்வளத் துறை ஆகிய துறைகள் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா்.

அணை வரலாறு:

மேட்டூா் அணை கட்டப்படுவதற்கு முன் 1924-ஆம் ஆண்டு அதிகபட்சமாக காவிரியில் நொடிக்கு 4,56,000 கனஅடி வரை தண்ணீா் வந்தது. அணை கட்டிய பிறகு 1961-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம்தேதி 3 லட்சம் கனஅடியும், 2005 அக்டோபா் 24-இல் 2,41,000 கனஅடியும் நீா்வரத்து இருந்தது.

அப்போது அணையிலிருந்து நொடிக்கு 2,31,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. 2019 ஆகஸ்ட் 12 ஆம் தேதி அணைக்கு 2. 53 லட்சம் கனஅடி நீா் வந்தது. மேட்டூா் அணை வரலாற்றில் 44 முறை அணையின் நீா்மட்டம் 120 அடியாகவும் 68 முறை 100 அடியாகவும் உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com