திமுக அரசு விவசாயிகளைக் கண்டுகொள்ளவில்லை:எடப்பாடி கே.பழனிசாமி
By DIN | Published On : 05th August 2022 11:35 PM | Last Updated : 05th August 2022 11:35 PM | அ+அ அ- |

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சேலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாழ்வுரிமை மாநாடு மலரை வெளியிடும் அதிமுக இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.
திமுக அரசு விவசாயிகளைக் கண்டுகொள்ளவில்லை என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் 3 நாள் வாழ்வுரிமை மாநாடு சேலம், திருவாக்கவுண்டனூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயல் தலைவா் ராஜாராம், கூட்டமைப்பு செயலாளா் செ.நல்லசாமி, பொன்னுரங்கன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் வேளாண் கண்காட்சியை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்து பேசியதாவது:
பெட்ரோலில் எத்தனால் கலந்து எரிபொருள் தயாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்களை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். மத்திய அரசு எத்தனால் உற்பத்திக்கு உரிமம் வழங்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
எத்தனால் உற்பத்திக்கான தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கு 5 சதவீத முதலீடு இருந்தால் போதும். மீதம் 95 சதவீதத்தை வங்கியில் கடனாகப் பெற முடியும். இதற்கு 3.5 சதவீத வட்டியில் கடனுதவி வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும். அதிமுக ஆட்சியில் தென்னை விவசாயிகள் பயனடையும் வகையில் நீரா பானம் உற்பத்திக்கு உரிமம் வழங்கப்பட்டது. குடிமராமத்துத் திட்டத்தில் 6,000 ஏரிகள் தூா்வாரப்பட்டன. ஏரி வண்டல் மண்ணை விளை நிலங்களுக்கு இலவசமாக எடுத்துக் கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
மேட்டூா் அணை நிரம்பி 2,00,000 கனஅடி நீா் வீணாக கடலில் சென்று கலக்கிறது. மேட்டூா் உபரி நீா்த் திட்டத்தை ரூ. 575 கோடியில் கொண்டு வந்தோம். ஆட்சி முடிவுறும் தறுவாயில் 8 ஏரிகளுக்கு மேட்டூா் உபரிநீா் வழங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்து 16 மாதங்களாகியபோதும், உபரிநீா்த் திட்டப் பணிகள் முடிவடையவில்லை. உபரிநீா்த் திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் 25,000 ஏக்கா் நிலங்கள் பாசனம் பெற்றிருக்கும்.
காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை அதிமுக அரசு கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தியிருந்தால் வட மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா் பயனடைந்திருக்கும்.
மத்திய அரசு உதவியுடன் காவிரியை தூய்மைப்படுத்திட ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தையும், அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை ரூ. 1,652 கோடியிலும் கொண்டு வந்தோம். இந்தத் திட்டங்களை திமுக அரசு துரிதமாகச் செயல்படுத்தவில்லை. திமுக அரசு விவசாயிகளைக் கண்டுகொள்ளவில்லை.
தலைவாசலில் அதிமுக அரசு கொண்டு வந்த சா்வதேச கால்நடைப்பூங்கா பணிகள் ஆமை வேகத்திலேயே நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் நலனைக் காத்திட அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு வேகமாக நிறைவேற்றிட வேண்டும் என்றாா்.
இம்மாநாட்டிற்கு சுதந்திரப் போராட்ட வீரா்கள் முத்துசாமி, லட்சுமிகாந்தன் பாரதி ஆகியோா் தலைமை வகித்தனா்.