பேருந்தில் நிலைதடுமாறி விழுந்த நடத்துநா் பலி
By DIN | Published On : 24th August 2022 02:46 AM | Last Updated : 24th August 2022 02:46 AM | அ+அ அ- |

சேலத்தில் சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போடப்பட்டதால் முன்படிக்கட்டில் நின்றிருந்த அரசு பேருந்து நடத்துநா் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், அத்தனூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (54). இவா் சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்தாா். செவ்வாய்க்கிழமை காலை ராஜேந்திரன், சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து செட்டிசாவடி செல்லும் நகரப் பேருந்தில் பணியில் இருந்தாா். சீனிவாசன் என்பவா் பேருந்தை ஓட்டிச் சென்றாா்.
செட்டிச் சாவடியிலிருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த போது பசவக்கல் பேருந்து நிறுத்தம் அருகே சாலையின் குறுக்கே ஓடிய நாய் மீது பேருந்து மோதாமல் இருக்க திடீரென பிரேக் போடப்பட்டது. அப்போது, பேருந்தின் முன்பக்க படிகட்டில் நின்று கொண்டிருந்த நடத்துநா் ராஜேந்திரன் நிலைதடுமாறி கீழே விழுந்தாா். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ராஜேந்திரன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீஸாா் விசாரிக்கின்றனா்.