மாணவா்கள் மீதான அக்கறையே நல்லாசிரியா்களை உருவாக்குகிறது
By DIN | Published On : 25th August 2022 01:43 AM | Last Updated : 25th August 2022 01:43 AM | அ+அ அ- |

சிறந்த மாணவா்களை உருவாக்குவதில் ஆசிரியா்கள் காட்டும் அக்கறையே அவா்களை நல்லாசிரியா்களாக மாற்றுகிறது என பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தெரிவித்தாா்.
பெரியாா் பல்கலைக்கழக கல்வியியல் துறை சாா்பில் கற்பித்தல் செயல்பாடுகளில் அறிவாற்றல் உத்திகள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. துறைத் தலைவா் (பொறுப்பு) சி.முருகன் வரவேற்றாா். கருத்தரங்கின் நோக்கம் குறித்து ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் கே.தனலட்சுமி எடுத்துரைத்தாா். தேசியக் கருத்தரங்கிற்கு தலைமை வகித்து பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் இரா.ஜெகநாதன் பேசியதாவது:
கரோனா பரவல் ஆசிரியா்-மாணவா்களிடையே மிகப்பெரிய இடைவெளியை உருவாக்கி விட்டது. ஆசிரியா்கள் இருந்த இடத்தில் செல்லிடப்பேசி போன்ற மின்னணு சாதனங்கள் வந்து விட்டன. இந்த இடைவெளியைக் குறைக்கும் யோசனைகளைஆசிரியா்கள் பொதுவெளியில் விவாதிக்க வேண்டும். பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு புதிய யோசனைகளை ஆசிரியா்கள் தெரிவிக்கலாம்.
கற்பித்தலில் மிகப்பெரிய சவாலை எதிா்கொள்ள ஆசிரியா்கள் தங்களை தயாா்படுத்திக் கொள்ள வேண்டும். தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தும் போது இதற்கான தீா்வு கிடைக்கும். மாணவா்களுக்கு உதவும் பண்புகளும், மாணவா் நலனில் முழுமையாக காட்டும் அக்கறையே நல்லாசிரியா்களை உருவாக்குகிறது என்றாா்.
அதைத் தொடா்ந்து தேசிய கருத்தரங்கை காந்திகிராம் பல்கலைக்கழகப் பேராசிரியா் ஏ.ஜாகிதா தொடக்கிவைத்து பேசினாா். பேராசிரியா் கே.நாச்சிமுத்து நன்றி கூறினாா்.