சேலத்தில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா தொடக்கம்
By DIN | Published On : 08th December 2022 01:20 AM | Last Updated : 08th December 2022 01:20 AM | அ+அ அ- |

சேலம் மாவட்ட அளவிலான பள்ளி மாணவா்களுக்கு இடையிலான கலைத் திருவிழா போட்டிகளை புதன்கிழமை தொடங்கி வைத்து பேசுகிறாா் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன்.
சேலம் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாப் போட்டிகளை மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் மருத்துவா் பெ.மேனகா ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
சேலம் மாவட்டத்தில் கலைத் திருவிழா போட்டிகள் அனைத்து வகை அரசு நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியருக்கு நடனம், நாடகம், இசை, கட்டுரை எழுதுதல், ஓவியம், கதை எழுதுதல், சிற்பம் செய்தல், பேச்சுப் போட்டி, இசைக் கருவி வாசித்தல், திருக்கு ஒப்பித்தல், புகைப்படம் எடுத்தல், பல குரல் பேச்சு, விவாத மேடை, பட்டிமன்றம் உள்ளிட்ட பல போட்டிகள் பள்ளி அளவில் நவ. 23 முதல் நவ. 28 வரையிலும், வட்டார அளவில் நவ. 29 முதல் டிச. 5 வரையிலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
தற்போது வட்டார அளவில் வெற்றிபெற்று முதல் இரண்டு இடங்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் புனித பால் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை தொடங்கியது.
இப்போட்டி வரும் டிச. 10-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் புனிதபால் மேல்நிலைப் பள்ளி, பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, பத்மவாணி மகளிா் கலை, அறிவியல் கல்லூரி, சக்தி கைலாஷ் மகளிா் கலை, அறிவியல் கல்லூரி, மணக்காடு நகரவை மகளிா் மேல்நிலைப் பள்ளி, கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சிறுமலா் தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
மாவட்ட அளவில் நடைபெறும் கலைத் திருவிழாவில் 207 வகையான போட்டிகளில் 15,365 மாணவ, மாணவியா் பங்கேற்கின்றனா். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்று வெற்றிபெற்ற மாணவ, மாணவியா் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளனா்.
மாநில அளவில் வெற்றிபெறும் மாணவ, மாணவியருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும், கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் தமிழக அரசின் சாா்பில் வழங்கப்பட உள்ளன. மேலும், மாநில அளவில் வெற்றிபெறும் மாணவா்களில் தர வரிசையில் முதன்மை பெறும் 20 மாணவா்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.முருகன், சேலம் மாநகராட்சி 29-ஆவது வாா்டு உறுப்பினா் கிரிஜா குமரேசன், பள்ளி மாணவ, மாணவியா், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.