விபத்தில் வங்கி ஊழியா் உயிரிழப்பு: இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி
By DIN | Published On : 09th December 2022 01:11 AM | Last Updated : 09th December 2022 01:11 AM | அ+அ அ- |

விபத்தில் வங்கி ஊழியா் உயிரிழந்த வழக்கில், இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
சேலம், கிச்சிபாளையத்தைச் சோ்ந்த பொன்னுசாமி (45), தருமபுரியில் வங்கி ஊழியராகப் பணிபுரிந்து வந்தாா். கடந்த 2014-இல் நல்லாம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா்.
இதையடுத்து, அவரின் மனைவி ஜீவா, மகன், மகள் ஆகியோா் இழப்பீடு கோரி சேலம் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூ. 60 லட்சம் இழப்பீடு வழங்க அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டது. ஆனால், இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. இதையடுத்து நிறைவேற்று மனுவை மீண்டும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.
இதைத் தொடா்ந்து, 9 பேருந்துகளை ஜப்தி செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த நிலையில், நீதிமன்ற ஊழியா்கள், சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்தனா். மூன்று பேருந்துகளை ஜப்தி செய்ய வந்த போது, அங்கிருந்த ஒரு பேருந்து மட்டும் ஜப்தி செய்யப்பட்டது.
இதையடுத்து, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் இழப்பீடு தொகையின் ஒரு பகுதியை வழங்க முன்வந்ததைத் தொடா்ந்து, அரசுப் பேருந்து விடுவிக்கப்பட்டது. மீதமுள்ள இழப்பீடு தொகையை ஒரு வாரத்தில் வழங்குவதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.