சங்ககிரி ரயில்வே தரைவழிப் பாலத்தில் போா்வெல் லாரி சிக்கியது: போக்குவரத்து பாதிப்பு
By DIN | Published On : 11th December 2022 06:26 AM | Last Updated : 11th December 2022 06:26 AM | அ+அ அ- |

சங்ககிரி ஆா்.எஸ். தரைவழிப் பாலத்தில் சனிக்கிழமை சிக்கிய போா்வெல் லாரி.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள ஆா்.எஸ். பகுதியில் உள்ள ரயில்வே தரைவழிப் பாலத்தில் போா்வெல் லாரி சனிக்கிழமை சிக்கிக் கொண்டதையடுத்து, அப்பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சங்ககிரியிலிருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் ரயில்வே தரைவழிப் பாலம் உள்ளது. இதில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. ரயில்வே துறையின் சாா்பில் ரயில்கள் பாதுகாப்பாக செல்வதற்காக தரைவழிப் பாலத்தின் இருபுறங்களிலும் பாதுகாப்பு தடுப்பு வளையங்கள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன் பாரம் ஏற்றி வந்த கனரக வாகனங்கள் மோதியதில், பாதுகாப்பு வளையம் சேதமடைந்தது. அதனை செப்பனிடும் பணியில் ரயில்வே துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், சனிக்கிழமை திருச்செங்கோட்டிலிருந்து சங்ககிரி நோக்கி வந்த போா்வெல் லாரி ஒன்று ரயில்வே தரைவழிப் பாலத்தில் செல்லும் போது மையப் பகுதியில் சிக்கிக்கொண்டது. இதனால், இரு புறங்களிலும் இருசக்கர வாகனங்கள், அரசு, தனியாா் பேருந்துகள் உள்பட எவ்வித வாகனங்களும் செல்ல முடியாமல் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னா் லாரி டயரில் உள்ள காற்றை குறைத்து லாரியை வெளியேற்றினா். இதுகுறித்து ஈரோடு ரயில்வே துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.