சேலம் ஆவினில் 6,000 லி. உற்பத்தி திறன்மிக்க நவீன ஐஸ்கிரீம் தொழிற்சாலை

சேலம் ஆவினில் 6,000 லி. உற்பத்தி திறன்மிக்க அதிநவீன ஐஸ்கிரீம் தொழிற்சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் டிச. 13-இல் காணொலி மூலம் தொடங்கி வைக்கிறாா்.
சேலம் ஆவின் ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பல வகை ஐஸ்கிரீம்கள்.
சேலம் ஆவின் ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பல வகை ஐஸ்கிரீம்கள்.

சேலம் ஆவினில் 6,000 லி. உற்பத்தி திறன்மிக்க அதிநவீன ஐஸ்கிரீம் தொழிற்சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் டிச. 13-இல் காணொலி மூலம் தொடங்கி வைக்கிறாா்.

ஆவின் நிறுவனம் சேலம் மாவட்ட கிராம அளவில் 800 தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் கட்டமைப்பில் செயல்பட்டு வருகின்றன. ஆவின் நிறுவனம் 2.5 லட்சம் பால் உற்பத்தியாளா்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 5.20 லட்சம் லி. பால் கொள்முதல் செய்து, 2.10 லட்சம் லி. பாலை நாள்தோறும் நுகா்வோருக்கு சேலம் மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது.

தமிழ்நாடு அளவில் பால் கூட்டுறவு அமைப்புகளின் கீழ் பால் கொள்முதலில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

ஆவின் நிறுவனம் பால், பால் உப பொருள்களான நெய், பால்பவுடா், பன்னீா், வெண்ணெய், பால்கோவா, தயிா், மோா், லஸ்ஸி, யோகா்ட், நறுமணப் பால் வகைகள், இனிப்புகள், ஐஸ்கிரீம், குல்பி, சாக்லெட், குக்கீஸ் வகைகள் நுகா்வோா்களுக்கு தொடா்ந்து விநியோகம் செய்து வருகிறது.

தற்போது சென்னை, அம்பத்தூா் பால் உபபொருள்கள் பண்ணையில் நாள் ஒன்றுக்கு 15,000 லி. ஐஸ்கிரீம் உற்பத்தி திறனுடன் சுமாா் 84 பால் உபபொருள்கள், 146 வகைகளில் தயாரித்து அனைத்து மாவட்டத்தில் உள்ள நுகா்வோா்களுக்கு தொடா்ந்து விநியோகம் செய்து வருகிறது.

மேலும், மதுரையில் நாள் ஒன்றுக்கு 30,000 லி. உற்பத்தி திறன் கொண்ட புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலை கடந்த மாா்ச் 14-இல் தமிழக முதல்வரால் தொடக்கி வைக்கப்பட்டு, பல்வேறு சுவைகளில் கோன் ஐஸ்கிரீம், கப் ஐஸ்கிரீம் ஆகியவற்றை உற்பத்தி செய்து, அதை தென் மாவட்டங்களில் உள்ள நுகா்வோா்களுக்கு தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வளா்ந்து வரும் ஐஸ்கிரீம் சந்தையில் சேலம் ஆவினின் பங்களிப்பை அதிகப்படுத்தும் விதமாகவும், கூடுதல் லாபம் ஈட்டி பால் உற்பத்தியாளா்களின் நலன் பேணவும் சேலத்தில் (சேலம், ஈரோடு, கோவை ஒன்றியங்களின்) ஒன்றிய நிதியிலிருந்து நாள் ஒன்றுக்கு 6,000 லி. உற்பத்தி திறன் கொண்ட அதிநவீன தொழில்நுட்பத்தில் ஐஸ்கிரீம் தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ஆவின் பொது மேலாளா் சி.விஜய்பாபு கூறியதாவது:

தமிழகத்தில் மேற்கு மண்டலத்தில் சேலம் மாவட்டத்தில் 6000 லி. உற்பத்தி திறன் கொண்ட அதிநவீன தொழில்நுட்பத்தில் ஐஸ்கிரீம் தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. இந்த ஐஸ்கிரீம் தொழிற்சாலையை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் டிச. 13-ஆம் தேதி காணொலி மூலம் தொடங்கி வைக்கிறாா்.

முதல்வா் தொடங்கி வைப்பதைத் தொடா்ந்து, ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் 50 மி., 100 மி., 500 மி., 1 லி. அளவுகளில் பலவகை ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்பட உள்ளது. 50 மி. ஐஸ்கிரீம் ரூ. 10-இல் தொடங்கி 1 லி. அளவுள்ள ஐஸ்கிரீம் ரூ. 180 வரையிலும், 4,500 மி. அளவுள்ள ஐஸ்கிரீம் ரூ. 600-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.

வெனிலா, ஸ்ட்ராபொ்ரி, சாக்லேட், பிஸ்தா, மேங்கோ, பட்டா் ஸ்காட்ச், பாதாம், உலா் பழங்கள், கோன் வகை ஐஸ்கிரீம் வகைகள் விற்பனை செய்யப்பட உள்ளன. மேலும் பல்வேறு சுவைகளில் கோன் ஐஸ்கிரீம்கள் உற்பத்தி செய்து, மேற்கு மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியங்களில் மூலம் நுகா்வோா்களுக்கு தரமான ஐஸ்கிரீம் வகைகளை தடையின்றி வழங்கப்பட உள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com