காவல்துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம் 211 மனுக்களுக்கு தீா்வு
By DIN | Published On : 22nd December 2022 02:11 AM | Last Updated : 22nd December 2022 02:11 AM | அ+அ அ- |

சேலம் மாநகர காவல் துறை சாா்பில் லைன்மேடு பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் குறைகளைக் கேட்டறியும் போலீஸாா்.
சேலம் மாநகர காவல்துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் 211 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சேலம் தெற்கு சரகம் சாா்பில் காவலா் சமுதாய கூடத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாமை மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா தொடங்கிவைத்தாா். பின்னா் ஆணையா் நஜ்மல் ஹோடா, மனுதாரா்களிடம் நேரடியாகக் குறைகளைக் கேட்டறிந்தாா்.
முகாமில் துணை ஆணையா் எஸ்.பி.லாவண்யா, உதவி ஆணையா்கள் சரவணன், வெங்கடேசன் உள்ளிட்ட ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா். முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது நேரடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து காவல் துணை ஆணையா் எஸ்.பி.லாவண்யா கூறியதாவது:
ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெறும். இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு மனு அளிக்கலாம். ஏற்கெனவே மனு அளித்து விசாரணையில் திருப்தி இல்லாதவா்கள் மீண்டும் விசாரணைக்கு வரலாம் என்றாா்.
அதுபோல சேலம் வடக்கு சரகம் சாா்பில் ஐந்து சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது. இதில் துணை ஆணையா் எம்.மாடசாமி, உதவி ஆணையா் நாகராஜன் உள்ளிட்ட ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா்.
சேலம் மாநகரத்தில் இரண்டு இடங்களில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் 256 மனுக்கள் மீது நேரடி விசாரணை மேற்கொண்டு 211 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.