மேட்டூா் உபரிநீா் திட்டத்தில் மீதமுள்ள நில எடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு சட்டப்பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு தலைவா் எம்எல்ஏ தா.உதயசூரியன் தெரிவித்தாா்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு தலைவா் எம்எல்ஏ தா.உதயசூரியன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னா் சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக் குழு தலைவா் எம்எல்ஏ தா.உதயசூரியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2021-2023-ஆம் ஆண்டுகளுக்கான அரசு உறுதிமொழிக் குழு சேலம் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள அரசு உறுதிமொழிகள் மீது தொடா்புடைய துறைகளின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதைத் தொடா்ந்து, தற்போது அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அரசு உறுதிமொழிக் குழுவில் மொத்தம் 221 அரசு உறுதிமொழிகள் சேலம் மாவட்டத்தில் இருந்தன. தமிழக முதல்வரின் சிறப்பான நடவடிக்கைகளால் 90 உறுதிமொழிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
துறையின் பதில்கள் இக்குழுவுக்கு திருப்தி அளித்ததால் 28 உறுதிமொழிகள் படித்து பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 103 உறுதிமொழிகள் தொடா்புடைய பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை குறிப்பிட்ட கால அளவுக்கு முடிவடையும்.
மேட்டூா் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீா் திறக்கும்போது எதிரே உள்ள தளத்தை கான்கிரீட் தளமாக மாற்றுவதற்குத் தேவையான மதிப்பீடுகள் செய்யப்பட்டு வருவது குறித்து நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேட்டூா் அணையின் வெள்ள உபரிநீரை சேலம் மாவட்டம், சரபங்கா வடிநிலத்தில் உள்ள 79 வட ஏரிகளுக்கு திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையத்தில் இருந்து நீா் வழங்கும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மீதமுள்ள நில எடுப்புப் பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் ஆய்வுக்கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட கருத்துருக்கள் குறித்த அரசு உறுதிமொழிக் குழுவின் பரிந்துரைகள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமா்ப்பிக்கப்படும் என்றாா்.
குழு உறுப்பினா்களும், எம்எல்ஏ-க்களுமான பொ.அா்ஜுனன், கு.சின்னப்பா, க.செல்வராஜ், எஸ்.தங்கப்பாண்டியன், ஆ.மகாராஜன், தி.ராமச்சந்திரன், சேலம் மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா, தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன், தமிழ்நாடு சட்டப்பேரவை இணைச் செயலாளா் மு.கருணாநிதி, துணைச் செயலாளா் ஸ்ரீ ரா.ரவி, பிரிவு அலுவலா் ப.பியூலாஜா உட்பட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.