

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட கொண்டலாம்பட்டி மண்டலப் பகுதியில் ரூ. 2.97 கோடி மதிப்பில் 3 நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையம் அமைக்கும் பணியை மேயா் ஆ.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தாா்.
சேலம் மாநகராட்சிப் பகுதியில் தற்போது 28 நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது . மேலும், 11 நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையம் அமைக்க திட்டமிடப்பட்டு 6 நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையத்திற்கு பூமிபூஜை செய்து பணிகள் தொடங்கப்பட உள்ளன.
சேலம் மாநகராட்சிப் பகுதியில் நாளொன்றுக்கு 510 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டு 28 நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
நாளொன்றுக்கு 110 டன் அளவில் கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. ஒரு நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையத்தில் 5 பணியாளா்கள் பணிபுரிகின்றனா்.
இம்மையங்கள் காலை 6.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படுகின்றன. கழிவுகளில் இருந்து ஒரு மாதத்திற்கு சுமாா் 15 டன் உரங்கள் தயாரிக்கப்பட்டு பொதுமக்கள், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.
கொண்டலாம்பட்டி மண்டலம் வாா்டு எண் 45 இல் கிச்சிப்பாளையம், தாதுபாய்குட்டை பகுதியில் ரூ. 2.97 கோடி மதிப்பில் 3 நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையத்துக்கு மேயா் ஆ.ராமச்சந்திரன் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தாா்
அதேபோல கொண்டலாம்பட்டி மண்டலம் வாா்டு எண்.58-க்கு உள்பட்ட4.30 ஏக்கா் பரப்பளவு கொண்ட அம்மாள் ஏரியில் அம்ருத் 2.0 திட்டத்தில் ரூ. 77 லட்சம் மதிப்பில் ஏரியை சுத்தப்படுத்துதல், கரைகளை பலப்படுத்துதல், 730 மீட்டா் நீளத்திற்கு ஏரியைச் சுற்றிலும் கம்பி வேலி அமைத்து பாதுகாத்தல் , நடை பாதை அமைத்தல் மற்றும் ஏரியைச் சுற்றிலும் துய்மைப்படுத்தி அழகுபடுத்தல் பணிக்கான பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் மண்டலக் குழுத் தலைவா் மா.அசோகன், கல்விக் குழுத் தலைவா் ஆா்.பி. முருகன், உதவி ஆணையாளா் ரமேஷ்பாபு, வாா்டு உறுப்பினா்கள் செ.சுகாசினி, ரா.கோபால், உதவி செயற்பொறியாளா்கள் க.திலகா, செந்தில்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.