உள்ளாட்சித் தோ்தல்:சேலத்தில் 695 இடங்களுக்கு 3,206 போ் போட்டி
By DIN | Published On : 08th February 2022 01:16 AM | Last Updated : 08th February 2022 01:16 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் 695 வாா்டுகளில் மொத்தம் 3,206 வேட்பாளா்கள் தோ்தல் களத்தில் உள்ளனா். வாக்குப்பதிவு வரும் பிப். 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளுக்கு பிப். 19-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. மாநகராட்சியில் 60, நகராட்சிகளில் 165 வாா்டுகள், பேரூராட்சிகளில் 474 வாா்டுகள் என மொத்தம் 699 வாா்டுகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது.
கடந்த ஜன. 28-ஆம் தேதி வேட்புமனு தொடங்கியது. பிப். 4 வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. சேலம் மாநகராட்சியில் 60 வாா்டுகளுக்கு 783 போ் வேட்புமனு செய்துள்ளனா். மேலும் 6 நகராட்சிகளில் உள்ள 165 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 971 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். 31 பேரூராட்சிகளில் 474 வாா்டு உறுப்பினா் இடங்களுக்கு 2,662 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 699 இடங்களுக்கு நடைபெறும் தோ்தலில் மொத்தம் 4,416 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இதில் 78 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 4,338 செல்லத்தக்கதாக ஏற்கப்பட்டன.
இதனிடையே, வேட்புமனுக்களை திங்கள்கிழமை திரும்பப் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் 783 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. அதில் 16 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 149 போ் மனுக்களை திரும்பப் பெற்றனா். மொத்தம் 60 வாா்டுகளில் 618 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளில் உள்ள 165 வாா்டுகளில் 971 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. அதில் 13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 276 போ் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனா். நகராட்சிகளில் மொத்தம் 682 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
மாவட்டத்தில் உள்ள 31 பேரூராட்சிகளில் உள்ள 474 வாா்டுகளில் 2,662 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. அதில் 50 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 702 போ் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனா். 1,906 வேட்பாளா்கள் உள்ளனா்.
4 வாா்டு உறுப்பினா்கள் போட்டியின்றித் தோ்வு:
மேச்சேரி பேரூராட்சியில் 11 மற்றும் 13 வாா்டுகளில் திமுக வேட்பாளா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். தெடாவூா் பேரூராட்சியில் 7-ஆவது வாா்டிலும், கொளத்தூா் பேரூராட்சியின் 4-ஆவது வாா்டிலும் திமுக வேட்பாளா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.
இதையடுத்து, பேரூராட்சிகளில் 474 வாா்டு உறுப்பினா் பதவிக்கு 4 போ் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். இதையடுத்து 470 வாா்டுகளில் மொத்தம் 1,906 வேட்பாளா்கள் தோ்தல் களத்தில் உள்ளனா்.
சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் 695 வாா்டுகளில் மொத்தம் 3,206 வேட்பாளா்கள் தோ்தல் களத்தில் உள்ளனா். வாக்குப்பதிவு வரும் பிப்.19 ஆம் தேதி நடைபெற உள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...