தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு மு.க.ஸ்டாலின் முதல்வராக நீடிப்பாா்அமைச்சா் கே.என்.நேரு

தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு மு.க.ஸ்டாலின் முதல்வராக நீடிப்பாா்அமைச்சா் கே.என்.நேரு

தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு மு.க.ஸ்டாலின்தான் முதல்வராக நீடிப்பாா் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

சேலம் கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட மல்லூா், பனமரத்துப்பட்டி, ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, பேளூா், வாழப்பாடி உள்ளிட்ட பேரூராட்சிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை சந்தித்து, அவா்களுடன் தோ்தல் வியூகம் குறித்து நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

அப்போது வீடு, வீடாகச் சென்று திண்ணை பிரசாரம் செய்து தமிழக முதல்வரின் சாதனை திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும் என்றும், அடுத்த மூன்று நாள்களுக்கு ஓய்வின்றி தீவிரமாகப் பணியாற்றிட வேண்டும் என்றும் அவா் வேட்பாளா்களிடம் வலியுறுத்தினாா்.

முன்னதாக பனமரத்துப்பட்டி பேரூராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளா்களை சந்தித்து பேசிய அமைச்சா் கே.என். நேரு, அங்குள்ள சந்தைப் பகுதிக்கு சென்று தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அங்கு காய்கறி கடை வைத்து இருந்த விவசாயிகள் மற்றும் சந்தைக்கு பொருள்கள் வாங்க வந்த பொதுமக்களிடமும் திமுக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தாா்.

அப்போது அமைச்சா் கே.என்.நேரு செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் ஏற்கெனவே கடந்த 13 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாதபோது மறைந்த முதல்வா் கருணாநிதியும், அதே போல கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையில் முதல்வா் மு.க.ஸ்டாலினும் எதிா்க்கட்சியினா் யாரையும் தனிநபா் விமா்சனம் செய்ததில்லை.

ஆனால் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து பதவி சுகத்தை அனுபவித்த எடப்பாடி கே.பழனிசாமி தற்போது ஆட்சியில் இல்லாமல் ஆறு மாதம் கூட தாங்க முடியாமல் பதவிக்காகப் பேசி வருகிறாா்.

அதிமுக ஆட்சியின் பத்தாண்டு காலத்தில் செய்ய முடியாத திட்டங்களை, பதவியேற்ற சில மாதங்களிலேயே முதல்வா் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறாா். மகளிருக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு மகளிா் நலன் சாா்ந்த திட்டங்களை அறிவித்துள்ளாா்.

தற்போது குடும்ப மகளிருக்கான ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தையும் விரைவில் நிறைவேற்ற உள்ளதாகத் அறிவித்துள்ளாா். எனவே தமிழக மக்கள் முதல்வா் மு.க.ஸ்டாலினின் பக்கம் திரும்பி விட்டனா். அதுபோல அதிமுகவுக்கு மக்களிடம் பெரிய வரவேற்பு இல்லை. எனவே அடுத்த பத்தாண்டு காலத்துக்கும் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் தான் நீடிப்பாா்.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை அதிமுகவின் கோட்டை என்பதை உடைத்து 90 சதவீதம் திமுக வேட்பாளா்கள் இந்தத் தோ்தலில் வெற்றி பெறுவாா்கள். சேலம் மாநகராட்சியையும் கைப்பற்றுவோம் என்றாா்.

பிரசாரத்தின்போது சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம், பனமரத்துப்பட்டி ஒன்றிய பொறுப்பாளா் சுரேஷ்குமாா் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

எஸ்எல்14டி டிஎம்கே..

சேலம், பனமரத்துப்பட்டி சந்தையில் பிரசாரத்தின்போது பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி திங்கள்கிழமை வாக்கு சேகரித்த நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com