நெருங்கியது பொங்கல் பண்டிகை: வாழப்பாடி பகுதியில் ராட்சத பலூன் விற்பனை

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், வாழப்பாடி பகுதியில் ஆள் உயர ராட்சத பலூன் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
வாழப்பாடியில் ராட்சத பலூன் விற்பனை செய்யும் வியாபாரிகள்.
வாழப்பாடியில் ராட்சத பலூன் விற்பனை செய்யும் வியாபாரிகள்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், வாழப்பாடி பகுதியில் ஆள் உயர ராட்சத பலூன் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

சிறுவர்கள் மட்டுமன்றி பெரியவர்களும், விளையாட்டு பொருளான பலூனை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிநவீன விளையாட்டு சாதனங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் எளிமையாகக் கிடைக்கின்ற இக்காலத்திலும், பழமையான எளிய விளையாட்டு பொருட்களில் ஒன்றான பலூன்களை வாங்கி ஊதி விளையாடி பொழுது போக்குவதில் தற்காலத்திலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வம் காட்டி வருகின்றனர்.

10 ஆண்டுகளுக்கு முன்வரை பொங்கல் பண்டிகை என்றாலே, அனைவருக்கும் முதலில் பலூன்கள் தான் நினைவுக்கு வந்தது. குறிப்பாக, மலிவான விலையில், அனைத்துப் பகுதிகளிலும் எளிதாகக் கிடைக்கும் பல வண்ண பலூன்களை வாங்கி, வாயில் காற்று ஊதி ஆடிப்பாடி சிறுவர்-சிறுமியர் பொழுதுபோக்கி மகிழ்ந்தனர். தற்போது நவீன கணிப்பொறி காலத்தில், மின் கலன்களில் இயங்கும் ரிமோட் கண்ட்ரோல் பொம்மைகள்,  விளையாட்டு பொருட்கள், வீடியோ கேம்கள், செல்லிடப்பேசி இணையவழி விளையாட்டு சாதனங்களும் பயன்பாட்டிற்கு வந்தால் பலூன் பயன்பாடு குறைந்து போனது.

தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி கிராமங்களில், ஏராளமான வியாபாரிகள், காற்று ஊதப்பட்ட ஆள் உயரத ராட்சத பலூன்களை தெருத்தெருவாக கொண்டு சென்று கூவி கூவி விற்பனை செய்து வருகின்றனர். இந்த பலூன்களை, சிறுவர்கள் மட்டுமன்றி, அனைத்து வயதினரும் விரும்பி கொள்முதல் செய்வதால், பழமையான பாரம்பரிய விளையாட்டு பொருட்களில் ஒன்றான பலூன்கள், வாழப்பாடி பகுதி கிராமங்களில் இன்றளவும் மவுசு குறையாமல் அமோகமாக விற்பனை ஆகிறது. 

இதுகுறித்து சேலத்தைச் சேர்ந்த பலூன் வியாபாரிகள் பொன்னி, ராசுகுட்டி, தெய்வானை, மைதிலி ஆகியோர் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக பலூன் விற்பனை செய்து வருகிறோம். ஒசூர் பகுதியில் உற்பத்தி செய்யும் இடத்திற்கு நேரில் சென்று, இந்த பெரிய அளவிலான பலூன்களை மொத்தமாக கொள்முதல் செய்து கொண்டு வந்து, காற்று அடைப்பானை பயன்படுத்தி காற்று நிரப்பி, கிராமப்புறங்களில் தெருத்தெருவாக சென்று விற்பனை செய்து வருகிறோம்.

தற்போது பல்வேறு நவீன விளையாட்டு சாதனங்கள் குழந்தைகளுக்கு எளிதாக கிடைத்து வரும் நிலையிலும், பொங்கல் பண்டிகை தருணத்தில் குழந்தைகளும், பெரியவர்களும் பலூன்களை விரும்பி வாங்குகின்றனர். இதனால், இன்றளவிலும் மவுசு குறையாமல் பலூன்கள் விற்பனையாகி வருகிறது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com