பத்திரிகையாளா்களுக்கான காப்பீட்டுத் திட்டம்: தொடக்கி வைத்தார் முதல்வர்

ஊதிய உச்சவரம்பின்றி அனைத்து பத்திரிகையாளா்களையும் அரசின் காப்பீட்டில் சோ்ப்பதற்கான திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.
பத்திரிகையாளா்களுக்கான காப்பீட்டுத் திட்டம் தொடக்கி வைத்தார் முதல்வர்
பத்திரிகையாளா்களுக்கான காப்பீட்டுத் திட்டம் தொடக்கி வைத்தார் முதல்வர்
Published on
Updated on
2 min read


ஊதிய உச்சவரம்பின்றி அனைத்து பத்திரிகையாளா்களையும் அரசின் காப்பீட்டில் சோ்ப்பதற்கான திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.

உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெறவேண்டும் என்ற உயரிய நோக்குடன், உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 23.07.2009 அன்று தமிழ்நாடு அரசால் துவக்கப்பட்டது. 11.01.2012 முதல் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவத் திட்டம், பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்துடன் இணைந்து 23.09.2018 அன்று முதல் செயல்படுத்தப்படுகின்றது. 

தற்போது செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இம்மாதம் முடிவு பெறுகிறது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் 2021-2022ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், ஐந்து ஆண்டுகளுக்கு மேலும் அதிக சிகிச்சை முறைகளுடன், பொதுத் துறை காப்பீட்டு நிறுவனத்தின் மூலம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஏழை எளிய திட்ட பயனாளிகள் அதிகபட்சம் ஆண்டு ஒன்றுக்கு குடும்பத்திற்கு ரூபாய் 5 இலட்சம் வரையில் கட்டணமில்லா சிகிச்சை பெறும் வகையில் செயல்படுத்தப்படும் என்றும், பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றும் வண்ணம், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு எந்தவித உச்சவரம்பின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளியாக சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்’ என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், ஏழை எளிய மக்கள் கூடுதல் பயன்பெறும் வகையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் குடும்ப ஆண்டு வருமானம் 72,000 ரூபாயிலிருந்து 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு 16.12.2021 அன்று அரசாணை வெளியிட்டது.

அதன்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (10.1.2022) சென்னை, எம்.ஆர்.சி. நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை 11.01.2022 முதல் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, பொதுத் துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கு அதற்கான உத்தரவை வழங்கினார். அத்துடன் தமிழக முதல்வர் முன்னிலையில் தமிழ்நாடு அரசுக்கும் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்திற்காக ரூ.1,248.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 11 தொடர் சிகிச்சை முறைகள், 52 முழுமையான பரிசோதனை முறைகள் மற்றும் 8 உயர் சிறப்பு சிகிச்சை முறைகள் உள்ளிட்ட 1090 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகளை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட 714 அரசு மருத்துவமனைகள் மற்றும் 886 தனியார் மருத்துவமனைகள், என மொத்தம் 1600 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பயன்பெறலாம். அத்துடன் 86 கூடுதல் சிகிச்சை முறைகள் தற்போது செயல்படுத்தப்படும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக 1.37 கோடி குடும்பங்கள் ஆண்டொன்றுக்கு 5 இலட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீட்டு வசதி பெற முடியும்.

செய்தித் துறையில் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் மற்றும் பருவ இதழ் செய்தியாளர்களின் குடும்பங்களை ஆண்டு வருமான உச்சவரம்பின்றி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இணைக்கவும், மேலும், இனிவரும் ஒவ்வோர் ஆண்டும் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறையிடமிருந்து அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களின் பட்டியல்களைப் பெற்று முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்  திட்டத்தில் சேர்க்கவும் அரசாணை வெளியிடப்பட்டது.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறையினால் 2020-2021 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட செய்தியாளர் அடையாள அட்டை உடைய 1,414 செய்தியாளர்களின் குடும்பங்கள் முதல் கட்டமாக இவ்வரசாணையின்படி இத்திட்டத்தில் பயனாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, முதல்வர் ஸ்டாலின், அங்கீகரிக்கப்பட்ட 10 செய்தியாளர்கள் / பருவ இதழ் செய்தியாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான அடையாள அட்டைகளை வழங்கி, திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com