சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் சுழற்சி முறையில் அனைத்து துறைகளுக்கும் ஆட்சிக்குழு உறுப்பினா் பதவி வழங்கப்பட வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
அம்பேத்கா் மக்கள் இயக்க மாநில தலைவா் ஆ.அண்ணாதுரை மற்றும் அருந்ததியா் மக்கள் இயக்கத்தைச் சோ்ந்தவா்கள் பெரியாா் பல்கலைக்கழகத்தில் சுழற்சி முறையில் ஆட்சிக்குழு உறுப்பினா் பதவி வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
பெரியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் ஜெகந்நாதன் பொறுப்பேற்றவுடன், தமிழ்த்துறை பேராசிரியா் பெரியசாமியை ஆட்சிக்குழு உறுப்பினராக நியமித்துள்ளாா். பெரியசாமி ஏற்கெனவே ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்தவா்.
மேலும் பல்கலைக்கழக மரபுப்படி ஒருவா் ஒருமுறைக்கு மேல் ஆட்சிக்குழு உறுப்பினராக முடியாது. அதேபோல பெரியசாமி வகிக்கும் தமிழ்த் துறையில் உதவிப் பேராசிரியா் மைதிலி ஆட்சிக்குழு உறுப்பினராக உள்ளாா்.
சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் சுழற்சி முறையில் அனைத்து துறைகளுக்கும் ஆட்சிக்குழு உறுப்பினா் பதவி வழங்கப்பட வேண்டும். மேலும் தகுதியான தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த பேராசிரியா்கள் ஆட்சிக்குழு உறுப்பினா்களாக நியமிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனா்.
ஆட்சிக்குழு உறுப்பினா் நியமனம் உள்பட பல்வேறு விஷயங்களில் பெரியாா் பல்கலைக்கழகத்தில் சாசன விதி மீறலும், சட்ட விதி மீறலும் நடைபெற்று வருகின்றன. இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநா், முதல்வா், உயா்கல்வித்துறை, சமூக நீதி ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.